திருவள்ளூர், காஞ்சியில் நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு வருவதால் கோரத்தாண்டவமாடும் குடிநீர் பிரச்னை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர், காஞ்சியில் நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு வருவதால் கோரத்தாண்டவமாடும் குடிநீர் பிரச்னை

சென்னை : திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு வருவதால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை கோரதாண்டமாடுவதால் ஆர்ப்பாட்டம், போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்து ேபானதால் நீர்நிலைகள் தொடர்ந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்கள் காலி குடங்களுடன், தண்ணீருக்காக தெரு தெருவாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதால் போராட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது.

அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் திகைத்து வருகின்றனர். திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள், தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல்வேறு ஏரிகள் உடைந்ததால் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் ஓட வழியில்லாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

2016ம் ஆண்டு மிகவும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போக தொடங்கின. தற்போது, மாவட்டம் முழுவதும் மக்கள் தண்ணீரின்றி கடும் வறட்சியில் அவதிப்பட்டு வருகின்றனர்.



வாழ்வாதாரத்துக்காக போராடி வந்த ஏழை மக்கள், தற்போது தண்ணீருக்காக தவியாய் தவித்து வருகின்றனர். இதனால், தண்ணீர் பிரச்சினையை தீர்க்காமல் உள்ளதாக அரசு மீது குற்றம்சாட்டி அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலைகளை மறித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசு கொடுத்து தண்ணீர் வாங்கி கட்டுப்படி ஆகாததால் மக்கள் காலி குடங்களுடன் தெரு தெருவாக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் முடிந்தும் இந்த நிலை உள்ளதால் என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிகர் வீதி, காமாட்சி அம்மன் கோயில் தெரு, காந்சி சாலை, பாண்டவ பெருமாள் கோயில் தெரு, சங்குபாணி விநாயகர் கோயில் தெரு மற்றும் மாகாளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

வீட்டு குடிநீர் குழாயில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் வருவதால் மக்கள் அதிகாலையில் எழுந்து தொலைவில் உள்ள பகுதிக்கு போர்வெல் குழாய்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

சில நேரங்களில் லாரிகளில் வரும் குடிநீரை பிடிக்க மக்கள் முண்டியடிக்கின்றனர்.
இதேபோன்று பவளவண்ணர் தெரு, தந்தை பெரியார் தெரு, வடகிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் முறையாக நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பாலாற்றில் இருந்து 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதனால் ஜேசிகே நகர், மலைபூங்கா, நத்தம்மலை, களத்துமேடு, தட்டான்மலை தெரு போன்ற பகுதிகளில் மக்கள் மறியல், நகராட்சி முற்றுகை போன்ற ேபாராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.   நத்தம் மலைக்கு பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதேபோன்று சிங்கபெருமாள்கோவில், பாலூர், ஆத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

ஆர்ப்பாட்டம், போராட்டம் வெடிக்க உள்ள நிலையில், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

.

மூலக்கதை