61 நாள் தடைக்காலம் முடிந்தது நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
61 நாள் தடைக்காலம் முடிந்தது நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

நாகை: தடைக்காலம் முடிந்ததையடுத்து நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் கையிலும் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஓய்வில் இருந்தனர்.

நேற்று (14ம் தேதி) நள்ளிரவு 12 மணியுடன் தடைக்காலம் முடிவடைந்தது.

தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மராமத்து பணிகளை மேற்கொண்டனர். படகுகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள பழுதுகளை வெல்டிங் வைத்து சரி செய்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்த பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தமாகினர். தங்களது படகுகளில் வலைகள், ஐஸ் கட்டி மற்றும் உப்பு ஆகியவற்றை ஏற்றினர்.

இதன்பின்னர் டீசல் நிரப்பினர். பின்னர் நாகை கடுவையாற்றில் நிறுத்தியிருந்த படகுகளுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி பூஜைகள் போட்டனர்.

மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் 700 படகுகளில் 3000 மீனவர்கள் நேற்று மாலையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் நாளை அல்லது நாளைமறுநாள் கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் காரைக்காலை சேர்ந்த சுமார் 2000 மீனவர்களும் நேற்று சுமார் 450 படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். இதேபோல், ராமேஸ்வரம் மீனவர்கள், 800 விசைப்படகுகளுடன் நேற்று மாலை கடலுக்கு சென்றனர்.

புதுச்சேரி: புதுவையில் கனகசெட்டிகுளம் தொடங்கி மூர்த்திக்குப்பம் வரை 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்கு செல்லும் பணிகளில் ஈடுபட்டனர்.

.

மூலக்கதை