தேன்மொழி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது: உறவினர்கள் கண்ணீர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேன்மொழி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது: உறவினர்கள் கண்ணீர்

ஈரோடு: சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் தேன்மொழி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் கூறினர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கவுண்டச்சிபாளையம் கள்ளியங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த வீரமணி (55), கூலி தொழிலாளி.

இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களுக்கு தேன்மொழி (25), ஞானமொழி (21), கோகுல் (19) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் தேன்மொழி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி வெற்றிபெற்று, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சொசைட்டியில் டைபிஸ்டாக பணியாற்றி வருகிறார். 2வது மகள் ஞானமொழி பட்டப்படிப்பு முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

3வது மகள் கோகுல் ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மோழி, ஈரோட்டை சேர்ந்த அவரது காதலன் சுரேந்தரால் அரிவாளால் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

தேன்மொழியின் வீட்டின் முன்பு அவரது தாத்தா மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் கூறுகையில், ‘‘வீரமணியின் குடும்பம் மிகவும் வறுமையானது.

தேன்மொழி கஷ்டப்பட்டு படித்து தற்போதுதான் அரசு வேலைக்கு சென்றார். அவர், மிகவும் அமைதியான பெண்.

கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்து விட்டு சென்றார். அப்போது கூட, மூத்த மகள் என்பதால் தங்கைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, திருமணத்திற்கு நகை- பணம் சேர்த்து வைப்பேன் என கூறி சென்றார்.

இந்நிலையில் அவர் வாலிபர் ஒருவரால் வெட்டப்பட்ட சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தேன்மொழியை வெட்டிய வாலிபரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

காதல் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்’’ என கண்ணீர் மல்க கூறினர்.

பூட்டிக்கிடக்கும் வாலிபர் சுரேந்தர் வீடு

தேன்மொழியை அரிவாளால் வெட்டிய சுரேந்தர் வீடு ஈரோடு மொசவண்ணா சந்து பகுதியில் உள்ளது.

இவரது தந்தை விஜயராகவன் (65). இவர், ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தாய் கலைச்செல்வி, ஈரோட்டில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மகள் திவ்யாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. மகன் சுரேந்தர் ஈரோட்டில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தேன்மொழிக்கும், சுரேந்தருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இது சுரேந்தரின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. தேன்மொழிக்கு சென்னையில் வேலை கிடைத்த பிறகு இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நண்பரின் திருமணத்திற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்ற சுரேந்தர் சென்னை சென்று தேன்மொழியை சந்தித்துள்ளார்.

தேன்மொழி பேச மறுத்ததால் அரிவாளால் வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. வாடகை வீட்டில் மகள், மகன் ஆகியோருடன் வசித்து வந்த விஜயராகவன் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றார்.

மகன் சுரேந்தருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த பெற்றோர் வேறொரு வாடகை வீட்டிற்கு குடிபெயர முடிவு செய்திருந்தனர். தந்தை விஜயராகவனுக்கு வலிப்புநோய் இருந்ததால் மகன் சுரேந்தர் அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்த எவ்வித தகவலும் நேற்றிரவு குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.

உறவினர் ஒருவருக்கு சென்னையில் உடல்நிலை சரியில்லை என்றும் எனவே நேரில் சென்று பார்த்து வரலாம் என்று கூறி நேற்றிரவு சென்னைக்கு விஜயராகவனை குடும்பத்தினர் அழைத்து சென்றதாக உறவினர்கள் கூறினர்.

அனைவரிடமும் சகஜமாக பேசி பழகும் வாலிபர் சுரேந்தர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை