ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு? கோவை வாலிபர்கள் 8 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு? கோவை வாலிபர்கள் 8 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை : இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

எனவே அதன் ஆதரவாளர்களை கண்டறிவதில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் நடத்திய விசாரணையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஜஹ்ரன் ஹாசிமுடன் கோவையை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வாலிபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கினர். கடந்த புதன்கிழமை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், இப்ராகிம் என்ற ஷாகின் ஷா, ஷேக் இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய 6 பேருக்கும் சொந்தமான வீடு, அலுவலகங்கள் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 6 ேபரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

பேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கி வாலிபர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் இணைத்து வந்ததாகவும், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி முகமது அசாருதீன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகமது அசாருதீனை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து முகமது அசாருதீன் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த சோதனையின் அடிப்படையில் இப்ராகிம் என்ற ஷாகின் ஷா, ஷேக் இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா 5 பேருக்கும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கொச்சி என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரான அந்த 5 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் ேஷக் இதயத்துல்லா தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன் (சிமி) தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

மற்ற 4 பேரிடமும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே இப்ராஹிம் என்ற ஷாகின் ஷா, ஷேக் இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோவை, உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மேலும் 5 வாலிபர்களை என்ஐஏ அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேரில் 3 பேரை கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும், ஒருவரை கோவையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திலும் வைத்து விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டது.



கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாருதீனின் பேஸ்புக் பக்கத்தில் இவர்கள் அதிக அளவில் கருத்துக்களை பரிமாறி இருந்ததும், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை புகழ்ந்து இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே இவர்களுக்கும் இலங்கை குண்டுவெடிப்பில் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், அதை விசாரிக்கும் நோக்கத்திலும் சம்மன் அனுப்பப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி அந்த 4 பேரிடமும் கொச்சியிலும், கோவையிலும் உள்ள அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை குண்டுவெடிப்பு அசாருதீன் தொடர்பு அம்பலம்

கோவையில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் இலங்கை குண்டுவெடிப்பு நடத்தியவர்களுடன் ஆன் லைன் மூலம் தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து என்ஐஏ தரப்பில் கூறியதாவது: இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்காக பல நாட்கள் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அப்போது குண்டு வெடிப்பு நடத்தியவர்களுடன் அசாருதீன் ஆன் லைன் மூலம் தொடர்பு வைத்துள்ளார். இதற்கான முக்கிய ஆவணங்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமுடனும் அசாருதீன் ஆன் லைன் மூலம் அடிக்கடி தொடர்பு வைத்திருந்தார். கிலாப் ஜிஎப்எக்ஸ் என்ற ஆன் லைன் குரூப் செயல்பட்டு வருவதும் அசாருதீனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த குரூப்பில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் பெரும்பாலும் தீவிரவாதம் தொடர்பான கருத்துகளே பகிரப்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. எனவே இதுகுறித்து விசாரணையில் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் அசாருதீனுடன் கேரளாவை சேர்ந்த யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

எனவே இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை