திருமண விழாவில் விருந்தினர்களுக்கு விதைப்பந்து வினியோகம்: மணவீட்டாருக்கு பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமண விழாவில் விருந்தினர்களுக்கு விதைப்பந்து வினியோகம்: மணவீட்டாருக்கு பாராட்டு

நாங்குநேரி: நெல்லையில் நடந்த திருமண விழாவில் விருந்தினர்களுக்கு விதைப்பந்து வினியோகிக்கப்பட்டது. மணவீட்டாரின் இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

சமீபகாலமாக திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு தாம்பூல பைகளுடன் மரக்கன்றுகள், புத்தகங்கள் போன்றவை வழங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு வித்தியாசமாக விதைப்பந்துகள் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்தவர் டாக்டர் அனீஸ் பாத்திமா. சமூக ஆர்வலரான இவருக்கும் டாக்டர் முகைதீன் அப்துல்காதீர் என்பவருக்கும் நேற்று முன்தினம் (13ம் தேதி) பாளையங்கோட்டையில் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு விதைப்பந்து மற்றும் அன்றாட வாழ்விற்கு உதவும் ஆலோசனைகளுடன் கூடிய நூல்கள் ஆகியவை தாம்பூலமாக வழங்கப்பட்டது.

ஒரு அட்டைப்பெட்டியில் வேம்பு, நாவல், பூவரசு, புங்கன், வாகை மரங்களின் விதைகள் அடங்கிய 6 விதைப்பந்துகள் இருந்தன. மேலும் அந்த அட்டை பெட்டியில் மரம் வளர்ப்பின் அவசியம் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டிருந்தது.

விதைப்பந்துகள் விதைக்க ஏற்ற நிலங்களாக ஆறு, குளம் ஓடை ஆகியவற்றின் கரைகள், கோயில் வளாகம் மற்றும் பயன்பாடற்ற தரிசு, வனப்பகுதிகள், நெடுஞ்சாலையோர நிலங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விதைப்பந்து விதைக்கும் முறைகள், கிடைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் எளிய தமிழில் சுலபமாக புரியும் வண்ணம் அச்சிடப்பட்டிருந்தது.

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை வருங்கால தலைமுறைக்கு உணர்த்துவதற்காக திருமண வீட்டார் எடுத்த வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

.

மூலக்கதை