தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு... கோவையில் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு... கோவையில் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

கோவை : கோவையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே கோவை உக்கடம் அன்புநகரில் உள்ள ஷாஜகான், உக்கடம் வின்சென்ட் ரோட்டிலுள்ள முகமது உசைன், கரும்புக்கடையிலுள்ள ஷேக் ஷபியுல்லா ஆகியோர் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.



இந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு போலீசார் கடந்த 12-ந் தேதி 3 பேர் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்தனர். அதைத்தொடர்ந்து 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 3 பேரையும் இன்று காலையில் ரேஷ்கோர்ஸ் நீதிபதி குடியிருப்பில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜர் படுத்தினர். அவர் 3 பேரையும் வருகிற 29-ந் தேதி வரை (15 நாட்கள்) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட இயங்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சதி திட்டம் தீட்டியதாகவும் இது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது கோவை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை