கெட்டுப்போன தோசைமாவை திருப்பி கொடுத்ததால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கெட்டுப்போன தோசைமாவை திருப்பி கொடுத்ததால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

நாகர்கோவில் : கெட்டுப்போன தோசை மாவை திருப்பிக்கொடுத்ததால் எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் நடத்திய மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.

பல்வேறு நாவல்கள், சிறுகதை எழுதியுள்ளார், சர்க்கார், பாபநாசம், எந்திரன் உட்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இந்தியன் - 2 படத்திற்கு தற்போது திரைக்கதை எழுதி வருகிறார்.

இவரது வீடு குமரி மாவட்டம், நாகர்கோவில், பார்வதிபுரம், சாரதா நகரில், கிராஸ் தெருவில் அமைந்துள்ளது. நேற்று இரவு 8. 30 மணியளவில் ஜெயமோகன், பார்வதிபுரம் ஜங்ஷன் பகுதியில் செல்வன் என்பவர் நடத்தி வருகின்ற மளிகை கடையில் இருந்து தோசை மாவு வாங்கியுள்ளார்.

மாவு பாக்கெட் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயமோகன் அந்த மாவு பாக்கெட்டை திரும்ப கொடுக்க வந்துள்ளார்.



அப்போது கடையில் செல்வனின் மனைவி இருந்துள்ளார். அவர் மாவு பாக்கெட்டை திரும்ப வாங்க மறுத்துள்ளார்.

உடனே ஜெயமோகன் மாவு பாக்கெட்டை கடையில் வைத்துவிட்டு திரும்பியுள்ளார். இதனை பார்த்த செல்வன், ஜெயமோகனை பார்த்து கெட்டவார்த்தையால் திட்டி, கன்னத்தில் பளார், பளார் என அறைவிட்டிருக்கிறார்.

மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயமோகன், நாகர்கோவில் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமடைந்த ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜெயமோகன் தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சேதி உண்மை.

ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன்.

இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்துவிட்டார்கள்.

கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி.

பாக்கெட்டை திருப்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார். நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன்.

அருகே அவர் கணவர் நின்றிருந்தார். அவர், என்னை தாக்க ஆரம்பித்தார்.

தாடையில் அடித்தார். கீழே விழுந்தபோது உதைத்தார்.

என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்ட வார்த்தை பேசினார்.

பின்னர் வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினார்.

வீட்டுக்குள் நுழைய முயன்றார். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன்.

காவல் நிலையம் சென்ற பின்னர் தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள்.

அரசியல் பிரமுகர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கிறேன்.

சிறு காயங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

.

மூலக்கதை