பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக உறுதிமொழி!

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக உறுதிமொழி!

திருப்பூர்:பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டுமென, உறுதிமொழி ஏற்பதன் வாயிலாக, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, ஜீவநதி நொய்யல் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்த பின்னரும், பயன்பாடு என்பது குறைந்தபாடில்லை. பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு சீக்கிரமாக மாற்றத்தை வரவழைக்க முடியாது.
எனவே, பிஞ்சு மனத்தில் நல்ல கருத்துக்களை விதைத்தால், அது, ஆலம் விருட்சமாக மாறி, சமூகத்தை பாதுகாக்கும். அந்த வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை, பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் பரப்ப, ஜீவநதி நொய்யல் சங்கம் திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கல்வியில், மாநில அளவில் சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடற்ற மாவட்டம் என்ற பெயர் எடுப்பதும் அவசியமாகிறது. அன்றாடம் வகுப்பு துவங்கும் போது, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் மற்றும் உறுதிமொழி வாசிப்பின் மூலமாக, மாணவர்கள் மத்தியில், நெகிழி இல்லா நகரை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்ட வேண்டும்.
கடந்த, 20 ஆண்டுகளாக, நொய்யல் பாதுகாப்புக்கும், திருப்பூர் வளர்ச்சிக்கும், ஜீவநதி நொய்யல் சங்கம் பாடுபட்டுள்ளது. தொழில்துறையினர், பொதுமக்கள், அரசுத்துறைகளை இணைத்து, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தற்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக களமிறங்கியுள்ளது.
ஜீவநதி நொய்யல் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மனதில், விழிப்புணர்வு வாசகங்களை நிலை நிறுத்தும் வகையில், தினமும் வகுப்பு துவங்கும் போது, உறுதிமொழி ஏற்க வேண்டும். தமிழக அரசின் முயற்சிக்கும், பொது அமைப்பினரின் சேவைக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில், பள்ளி, கல்லுாரிகள் முழு ஆதரவை நல்க வேண்டுமென, அனைத்து பள்ளி, கல்லுாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் குப்பையை வெளியே துாக்கி எறிவதால், பிற உயிர்களும் பாதிக்கும் என்பதால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். வீட்டில் உருவாகும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து, தொட்டிகளில் சேர்க்க வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால், குறுகிய காலத்தில் பயன்பாட்டை அறவே ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களால் 'பேக்கிங்' செய்த பொருட்கள் நுகர்வை தவிர்த்து, இயற்கை முறை உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.கடல், ஆறு, நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாய்களில், பிளாஸ்டிக் பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கிருமி தொற்று அதிகரிக்கிறது. பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, பாலிதீன் பைகள் பயன்பாட்டை தவிர்ப்போம் என்று, வகுப்பறைகளில் உறுதிமொழி ஏற்க வேண்டும். 350க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களுக்கு, கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை