முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ‘கொர்’ 3,500 கோடிக்கு மேல் இழப்பு : தமிழக மின்சாரவாரியம் விழித்துக்கொள்ளுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ‘கொர்’ 3,500 கோடிக்கு மேல் இழப்பு : தமிழக மின்சாரவாரியம் விழித்துக்கொள்ளுமா?

சென்னை : தமிழகத்தில் அடுத்தடுத்து வீசிய புயல்களின் காரணமாக, மின்வாரியத்திற்கு, ரூ. 3. 500 கோடிக்கு ேமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் பருவமழை துவங்கவிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தாமல் வாரியம் வழக்கம்போல் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தினசரி சராசரி மின்தேவை 14,000 மெகாவாட்டிற்கு மேல் இருக்கிறது.   தமிழகத்தில் பெரும்பாலும் கம்பங்கள் மீதான வயர்கள் மூலமாகவே மின்சப்ளை நடைபெறுகிறது. இதனால் இயற்கை சீற்றங்களின்போது கம்பங்கள் சாய்ந்து, உடைந்துவிடுவதால் மின்சப்ளை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த பாதிப்பானது தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிமாக இருக்கிறது. இதற்கு இங்கு மற்ற இடங்களை விட புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதே காரணம்.

இது தமிழகத்தில் அடுத்தடுத்து வீசி வரும் புயல்களின் மூலம் நிரூபணமாகி வருகிறது.

கடந்த, 2011ம் ஆண்டு ‘தானே’ புயல் வீசியது.

அப்போது, 300 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. இதேபோல், 2016ம் ஆண்டு ‘வர்தா’ புயல் வீசியது.

இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,093 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனங்கள் சின்னாபின்னமானதாக கூறப்பட்டது. அதே ஆண்டின் இறுதியில், ‘ஒக்கி’ புயல் வீசியது.

அப்போது, ரூ. 238 கோடி மதிப்பிலான, மின் சாதனங்கள் ேசதமடைந்ததாக கூறப்பட்டது. அதேபோல், ‘கஜா’ புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், 2,300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து வீசும் புயல்களினால் சுமார், 3,500 கோடி  ரூபாய்க்கு மேல் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு புறம் மாதக்கணக்கில் புயல்பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமத்தை சந்தித்தனர்.

மேலும் மின்இணைப்பு கொடுப்பதற்கான பணி செய்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது ஒப்பந்தபணியாளர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டனர்.

இன்னும் பல இடங்களில் கஜா புயலினால் விழுந்த மின்கம்பங்கள்கூட இன்னமும் சரிசெய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மின்சார வாரியம் மின்கம்பங்களின் வழியாக மின்சப்ளை செய்வதே இதற்கு காரணம்.

எனவே தான் தொடர்ந்து இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதைதடுக்க தரைவழி மின்கேபிள் திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே முடியும்.


ஆனால் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் வாரியம் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதவாது கடந்த, 2011ம் ஆண்டு ‘தானே’ புயலால் பாதிப்பு ஏற்பட்ட போதே, தரைவழி மின்கேபிள் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால் இதுவரை மாநிலம் முழுவதும் முழுமையாக இப்பணி துரிதகதியில் மேற்கொள்ளப்படவில்லை.

உடனடியாக தரைவழி கேபிள் பதிக்கும் பணி நடந்திருந்தால், பெரும் இழப்ைப தடுத்திருக்க முடியும்.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதையொட்டி பலஇடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும்காலங்களில் அதிகமாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஒருவேளை புயல் உருவாகும் பட்சத்தில், அதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விவகாரத்தில் இனியும் காலம்கடத்தாமல் மின்வாரியமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைக்கின்றனர்.

.

மூலக்கதை