உக்கடம் சந்திப்பில் போக்குவரத்து குண்டக்க மண்டக்க

தினமலர்  தினமலர்

கோவை:உக்கடம் சந்திப்பை தினமும் கடந்து செல்வதற்குள், வாகன ஓட்டிகள் நொந்து நுாலாகித்தான் போகின்றனர். கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் வாயிலாகவும், மேம்பால பணியை விரைந்து முடிப்பதன் வாயிலாகவும் இந்த இடியாப்ப சிக்கலுக்கு போக்குவரத்து போலீசார் தீர்வு காண வேண்டும்.
கோவை உக்கடத்தில் இருந்து, ஆத்துப்பாலம் வரையிலான, 1.97 கி.மீ., தொலைவுக்கு, 121 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டும் பணி கடந்தாண்டு ஏப்., மாதம் முதல் நடந்து வருகிறது.தற்போது 'கான்கிரீட் கர்டர்களை' துாக்கி, துாண்கள் மீது நிறுவும் பணி நடைபெறுவதால், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், புட்டுவிக்கி மற்றும் நஞ்சுண்டாபுரம் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலத்துக்கு தற்போது, இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், ஒருவழி பாதையாக பயன்படுத்தப்பட்ட குளக்கரை பாதையில் வேன்கள், ஆட்டோக்களும் அத்துமீறி எதிர்திசையில் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொள்ளாச்சி ரோடு செல்லும் பஸ்கள், லாரிகள் பெரும்பாலும் ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனுார் வழியாக அடைகின்றன. இதனால், உக்கடம் சந்திப்பில் மட்டுமின்றி, நஞ்சுண்டாபுரம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சந்திப்புகளில் பேரிகார்டர்களை அமைத்து, வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும்.போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர்(பொ) பெருமாள் கூறுகையில்,''உக்கடத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் செல்வபுரம் ரோடு, புட்டுவிக்கி வழியாக இடையூறு இல்லாமல் சென்றடைய, இரு நாட்களில் அந்த ரோடு சீரமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து பிரச்னை ஓரளவு குறையும். மேம்பால பாலப்பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்,'' என்றார்.
பாலப்பணிகளை விரைந்து முடிப்பது மட்டுமே, நிரந்தர தீர்வு. அதுவரை, மாற்று வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், குறுகலான ரோடு போன்ற போக்குவரத்து பிரச்னைகளை சரிசெய்வதன் மூலம், வாகன ஓட்டிகளின் சிரமங்களுக்கு தீர்வு காண வேண்டும்.கனரக வாகனங்களால் சிக்கல்சேலம் -கொச்சின் பைபாஸ் 'டோல் கேட்' கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், பொள்ளாச்சியில் இருந்து வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் நஞ்சுண்டாபுரம் ரோடு வழியாக, திருச்சி ரோட்டை அடைகின்றன.
அங்கிருந்து ஒண்டிப்புதுார் வழியாக செல்கின்றன. எனவே, பாலப்பணிகள் முடியும் வரை, டோல் கேட் கட்டணத்தில் சலுகை வழங்கி, மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு வழியாக பைபாஸ் ரோட்டில், திருச்சி ரோடு செல்லும் கனகர வாகனங்களை திருப்பிவிட வேண்டும்.'ஐந்து மாதங்களில் பணி முடியும்'நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர்(கோவை) சிற்றரசு கூறுகையில், ''கான்கிரீட் 'கர்டர்'களை துாண்களில் துாக்கி வைப்பதால், வாகன போக்குவரத்துக்கு போதிய இடவசதி இருக்காது. எனவே, தற்போதைக்கு வாகனங்கள் செல்ல முடியாது. முக்கிய கட்டுமான பணிகளை, ஐந்து மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

மூலக்கதை