புதிய அத்தியாயம்! உப்பின்றி சாயமேற்றும் தொழில்நுட்பம் வெற்றி

தினமலர்  தினமலர்
புதிய அத்தியாயம்! உப்பின்றி சாயமேற்றும் தொழில்நுட்பம் வெற்றி

திருப்பூர்:உப்பு இன்றி சாயமேற்றும் தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம் நேற்று முடிவடைந்தது. துணி மற்றும் சாயக்கழிவு மாதிரிகள், சோதனை கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அடல் இன்கு பேஷன் மையம் மற்றும் மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சிர்காட்) இணைந்து, உப்பு இன்றி சாயமேற்றும் தொழில்நுட்பத்தை வெற்றி பெறச்செய்ய முனைப்புகாட்டிவருகின்றன.
இதற்கான சோதனை ஓட்டம், முருகம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் சாய ஆலையில், கடந்த 10ல் துவங்கியது. சிறப்பு வகை வேதிப்பொருளை பயன்படுத்தி, உப்பு இன்றி, சிவப்பு, நீலம் என வெவ்வேறு நிறங்களில் துணிக்கு சாயமேற்றி, சேம்பிள் உருவாக்கப்பட்டுள்ளது.மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்துவந்த இந்த சோதனை ஓட்டம், நேற்றுடன் முடிவடைந்தது. உப்பு இன்றி சாயமேற்றிய துணியின் தன்மையை; சாயமேற்றியபின் வெளியேறிய கழிவுநீரின் தன்மைகளை ஆராய்வதற்கு, சாயமேற்றிய துணி மற்றும் கழிவுநீர், சோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:உப்பு இன்றி சாயமேற்று வதற்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது.
சிவப்பு, நீலம் போன்ற சிக்கலான சில நிறங்களை பயன்படுத்தி, உப்பு இன்றி துணிக்கு சாயமேற்றப்பட்டுள்ளது.உப்பு பயன்படுத்தி சாயமேற்றப்பட்ட துணியின் தன்மைகள், நிறத்தின் அளவீடுகளுக்கு இணையாக, உப்பு இன்றி சாயமேற்றிய துணியில் தன்மைகள் இருப்பது அவசியமாகிறது.
அதேபோல், சாயக்கழிவு சுத்திகரிப்புக்கென்று சில அளவீடுகள் உள்ளன; உப்பு இன்றி சாயமேற்றும்போது வெளியேறும் கழிவுநீரின் அளவு, சுத்திகரிப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.இவற்றை கண்டறிவதற்காக, மாதிரிகள், சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. விரைவில் முடிவுகள் தெரியவரும். துணியில் மிக துல்லியமாக சாயமேற்றப்பட்டிருப்பதை கண்களால் காணமுடிகிறது.
எனவே, சோதனை முடிவுகள் சாதகமாகவே அமையும்; உப்பு இல்லா சாயமேற்றும் தொழில்நுட்பம் வெற்றிபெறும் என முழுமையாக நம்புகிறோம்.இந்த தொழில்நுட்பம் பரவலாகும்போது, சாயக்கழிவு சுத்திகரிப்பு எளிதாகிவிடும்; சுத்திகரிப்பு நிறுவனங்களின் செலவு வெகுவாக குறையும். எவாப்ரேட்டர் போன்ற சுத்திகரிப்பு கருவிகளுக்கு ஏற்படும் பளுவும் குறைந்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை