ஐ.டி. நிறுவனங்கள் மட்டும் விதி விலக்கல்ல : தண்ணீர் பஞ்சத்தால் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு ஐ.டி. ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஐ.டி. நிறுவனங்கள் மட்டும் விதி விலக்கல்ல : தண்ணீர் பஞ்சத்தால் வீட்டில் இருந்து பணிபுரியுமாறு ஐ.டி. ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை : சென்னை நகரில் பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) அமைந்துள்ள  ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று தெரிய வேண்டுமா ? வேறென்ன தண்ணீர் பிரச்சனை தான்..சென்னையில் மழை பெய்து சுமார் 200 நாட்கள் கடந்துவிட்டன.அதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சாமானிய மக்களை அள்ளல்படுத்தும் தண்ணீர் பிரச்சனை, ஐடி. நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 6000 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. உதராணமாக சோளிங்நல்லூரிலுள்ள ஃபோர்டு நிறுவனம், அங்கு பணியாற்றும் ஊழியர்களை அவர்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளன. அத்துடன் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளனஐடி ஊழியர்களை தங்களுக்கு எந்த இடம் வசதியானதாக இருக்குமோ அங்கு இருந்து அலுவல் பணிகளை மேற்கொள்ள ஐ.டி  நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மாதம் ஒரு முறை நடக்கும் ஆலோசனை கூட்டங்களில் மட்டும் பங்கேற்க அலுவலகம் வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தியுள்ளன .12 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 5000 ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய உத்தரவு வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தின் போது   இதே போல் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்யலாம் என ஐ.டி கம்பெனிகள்  தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சுமார் 6000 ஐ.டி கம்பெனிகள் டைடல் பார்க் மற்றும் எல்காட் வளாகங்களில் இயங்கி வருகின்றன. கோடை காலத்தில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நிறுவனங்களுக்கு  மட்டும் சுமார் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் பெரும்பாலான தண்ணீர் வெளியிலிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. இவற்றில் 60 சதவிகித தண்ணீர் ஐடி நிறுவனங்களால் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சிப்காட் ஐடி பகுதியில் 46 ஐடி நிறுவனங்கள் உள்ளன. அவற்றிற்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது.இதற்கு அங்குள்ள 17 கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தத . ஆனால் தற்போது அங்கு ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே தினமும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனிடையே இந்த தண்ணீர் பிரச்னையை போக்க ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை அணுகிய போது, பிரச்சனை கண்டிப்பாக தீர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதிதியளித்துள்ளனர், ஆனால் அந்த உறுதி காப்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டப்படுகிறது. இதனிடையே சில ஐ.டி கம்பெனிகள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பயன்பாடு குறித்து போஸ்டர்கள்  ஒட்டியுள்ளன.

மூலக்கதை