'சிப்ஸ், பீட்சா, பர்கர், நூடுல்ஸ்' விளம்பரங்களுக்கு தடை

தினமலர்  தினமலர்
சிப்ஸ், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் விளம்பரங்களுக்கு தடை

புதுடில்லி: பள்ளி வளாகங்களுக்கு அருகில், குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான, 'நுாடுல்ஸ், பீட்சா, பர்கர்' போன்ற, 'ஜங்க் புட்' உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தீங்கு:


டில்லியில் நடந்த, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் அகர்வால் கூறியதாவது: கடந்த, 2015ல், டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தெரிவித்திருந்தது.

ஆனால், அதை முடிவு செய்வதில் சில பிரச்னைகள் இருந்தன. ஆரோக்கியமான உணவு எது, தீங்கு ஏற்படுத்தும் உணவு எது என்பதை வரையறை செய்வதில், குழப்பங்கள் இருந்தன. வெளிநாடுகளில் இருந்து வரும் பல உணவு பொருட்கள், தீங்கு ஏற்படுத்துபவையாக உள்ளன. அதேபோல், நம் நாட்டில் தயாராகும் சில உணவு பொருட்களும் அப்படித் தான் உள்ளன. இந்நிலையில், நீண்ட ஆய்வுக்கு பின், இது தொடர்பாக சில வரையறைகளை உருவாக்கி, சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிஉள்ளோம்.


தடை:


இதற்கிடையே, பள்ளி வளாகங்களில், குழந்தைகளின் உடல் நலத்துக்கு கேடு ஏற்படுத்தும், சில வகையான, 'சிப்ஸ், பீட்சா, பர்கர், நுாடுல்ஸ்' மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, 'ஜங்க் புட்' எனப்படும், குறிப்பிட்ட உணவு பொருட்களின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களிலும், பள்ளி வளாகத்திலிருந்து, 50 மீட்டர் சுற்றளவு துாரத்துக்குள்ளும், இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

மூலக்கதை