மழையால் கைவிடப்பட்டது இந்தியா-நியூசிலாந்து ஆட்டம்

தினகரன்  தினகரன்
மழையால் கைவிடப்பட்டது இந்தியாநியூசிலாந்து ஆட்டம்

நாட்டிங்காம்: உலக கோப்பை தொடரில் மழை காரணமாக 4வது போட்டியாக இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டியும்  கைவிடப்பட்டது. உலக கோப்பை தொடரின் 18வது போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. இதுவரை தோல்வியை சந்திக்காத அணிகள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் போட்டி நடைபெற இருந்த நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ்  அரங்கில் இந்திய ரசிகர்கள் வழக்கம் போல் குவிய ஆரம்பித்தனர். இந்தியாவின் தொடர் வெற்றி காரணமாக ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக  டாஸ் சுண்டுவதற்காக நடுவர்கள் களத்துக்குள் வரவேயில்லை. பிறகு ேநற்று முன்தினம் நாட்டிங்காமில் பெய்த மழை காரணமாக மைதானம் ஈரமாக இருப்பதுதான் தாமதத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. அதன் பிறகு லேசான மழை பெய்ய நிலைமை மோசமானது. விரிப்புகள் கொண்டு பிட்ச் மூடப்பட்டது. மழை நின்றதும் ஐசிசி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வது தொடர்கதையானது.  அவர்களுக்கு திருப்தி இல்லாததால் போட்டி தொடங்கப்படவில்லை. தாமதம் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என்று காத்திருந்த ரசிகர்களும் களைய ஆரம்பித்தனர். ஆனாலும் பலர் அரங்கை விட்டு வெளியேறாமல் காத்திருந்தனர். சூப்பர்சானிக் இயந்திரத்தின் மூலம் மைதானத்தின் ஈரபதத்தை குறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பலனளிக்காததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த தொடரில் மழை காரணமாக கைவிடப்படும் 4வது போட்டியாகும் இது. ஏற்கனவே  இதுபோல்  இலங்கை-வங்கதேசம், இலங்கை-பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்ரிக்கா இடையிலான போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன.

மூலக்கதை