அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்த்த இந்தியா :ஐ.நா.,சபை வர்த்தக அறிக்கையில் தகவல்

தினமலர்  தினமலர்
அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்த்த இந்தியா :ஐ.நா.,சபை வர்த்தக அறிக்கையில் தகவல்

புதுடில்லி:கடந்த ஆண்டில், இந்தியா, 2.92 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின், வர்த்தக அறிக்கை தெரிவித்துள்ளது.


ஐ.நா., சபையின், ‘உலக முதலீட்டு அறிக்கை – 2019’ எனும், அதன் வர்த்தக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2018ல், இந்தியாவில், 2.92 லட்சம் கோடி ரூபாய்க்கு, அன்னிய நேரடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தயாரிப்பு துறை, தொலை தொடர்பு துறை, நிதிச் சேவைகள் துறை ஆகியவற்றில், அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 6 சதவீதம் அதிகமாகும்.


தெற்கு ஆசியாவில், அன்னிய நேரடி முதலீடு, 3.5 சதவீதம் அதிகரித்து, 3.75 லட்சம் கோடி ரூபாய் அளவை எட்டியிருக்கிறது. இதில், இந்தியா மட்டும், 77 சதவீத அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தெற்கு ஆசியாவில், இத்தகைய பெருமளவிலான முதலீடுகளுக்கு முக்கிய காரணம், இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் வளர்ச்சி அடைந்து வருவது தான்.


இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில், பிற நாடுகளுடனான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மூலம், 2.29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 1.60 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.மின்னணு வர்த்தகம், தொலை தொடர்பு ஆகிய துறைகளில் மட்டும், கடந்த ஆண்டில், 91 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தை, ‘வால்மார்ட்’ கையகப்படுத்தியது மிக முக்கியமான ஒன்றாகும். தெற்கு ஆசியாவைச் சேர்ந்த, பிற நாடுகளைப் பொருத்தவரை, வங்கதேசம், 25 ஆயிரம் கோடி ரூபாயையும்; இலங்கை, 11 ஆயிரம் கோடி ரூபாயையும் ஈர்த்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளை விட, இது அதிகமாகும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, 27 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அங்கு செய்யப்பட்ட முதலீடு, 17 ஆயிரம் கோடி ரூபாய்.மொத்தத்தில், கடந்த ஆண்டில், தெற்கு ஆசியாவைச் சேர்ந்த வளரும் நாடுகளில், அன்னிய முதலீடு, 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.உலகில் உள்ள, 5,400 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், 4,000த்துக்கும் அதிகமானவை, ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் உள்ளன.


இந்தியா முதலீடுகளை பெருக்கும் வகையில், விதிகளை தளர்த்தி வரும் காரணத்தால், அங்கு முதலீடு அதிகரித்து வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ஆசியாவில் உள்ளசிறப்பு பொருளாதார மண்டலங்கள்

சீனா: 2,543

பிலிப்பைன்ஸ்: 528


இந்தியா: 373


துருக்கி: 102

தாய்லாந்து: 74


கொரியா: 47


மலேஷியா: 45

மூலக்கதை