இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியுடன் தொடர்பு: கோவை வாலிபர் கைது: 5 பேருக்கு சம்மன்... பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியுடன் தொடர்பு: கோவை வாலிபர் கைது: 5 பேருக்கு சம்மன்... பரபரப்பு தகவல்கள்

கோவை: இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக கோவையில் கடந்த ஆண்டு இந்து இயக்க தலைவர்கள் சிலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறி இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் கருத்துக்களையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது. இதில் சில இளைஞர்கள் இலங்கையை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறி கோவையை சேர்ந்த முகமது அசாருதீன் (32), அக்ரம் ஜிந்தா (26), ஷேக் இதயத்துல்லா (38), அபுபக்கர் (29), சதாம் உசேன் (26), இப்ராஹிம் என்ற ஷாகின்ஷா (28) ஆகியோர் மீது என்ஐஏ அதிகாரிகள் கடந்த மே மாதம் 30ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

அதன்பேரில் கடந்த மாதம் கோவையில் உள்ள சிலரது வீடுகளில் சோதனையும் நடந்தது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து நேற்று என்ஐஏ அதிகாரிகள் கோவை வந்தனர்.

அவர்கள் கோவை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், பகுதிகளைச் சேர்ந்த அசாருதீன், அக்ரம் ஜிந்தா, ஷேக் இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், இப்ராஹிம் என்ற ஷாகின்ஷா ஆகிய 6 பேருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர்.

அசாருதீன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அபுபக்கர் சித்திக் போத்தனூரில் உள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றுகிறார்.

ஷேக் இதயத்துல்லா தேன் வியாபாரம் செய்கிறார். சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகியோர் நகைக்கடையில் பங்குதாரராக உள்ளனர்.

இப்ராஹிம் வாசனை திரவியம் தொழில் செய்கிறார். நேற்று இவர்களின் வீடுகளில் நடந்த சோதனையில் 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 4 கணினி ஹார்ட் டிஸ்க்குகள், ஒரு இணைய சேவை கருவி, 13 குறுந்தகடுகள், ஒரு கத்தி, 300 ஏர்கன் (துப்பாக்கி) குண்டுகள், துண்டு பிரசுரங்கள், டைரி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் கருவிகள் டெல்லியில் உள்ள என்ஐஏ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. சோதனைக்குப் பின்னர் அவர்கள் 6 பேரும் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இந்த சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டதாகவும், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்ஐஏ அதிகாரிகள் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.

அங்குள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முகமது அசாருதீனை ஆஜர்படுத்துகிறார்கள். கோவையில் நேற்று விசாரிக்கப்பட்ட மற்ற 5 பேரையும் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கோைவயில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அசாருதீன், அக்ரம் ஜிந்தா, ஷேக் இதயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், இப்ராஹிம் என்ற ஷாகின்ஷா ஆகிய 6 பேரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க மூளைச்சலவை செய்து தமிழகம் மற்றும் கேரளத்தில் சில இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள முடிவு செய்து இருந்ததாக தெரிகிறது.

இவர்களுக்கு முகமது அசாருதீன் தலைவர்போல செயல்பட்டுள்ளார்.

முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகவும் மனித வெடிகுண்டாகவும் செயல்பட்ட ஜஹ்ரன் ஹாஷிம் என்பவருடன் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளார்.

முகமது அசாருதீன் ஹில்லாபா ஜிஎப்எக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்டுக்கான லோகோவில் ஐஎஸ்ஐஎஸ் கொடி இடம் பெற்றுள்ளது.

மேலும் அதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய தொடர்புடையவராக, மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஜஹ்ரன் ஹாஷிம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்தவர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தி பணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் கோவையை சேர்ந்த இப்ராஹிம் என்ற ஷாகின் ஷா என்பவர் தொடர்பில் இருந்துள்ளார்.

அதன் அடிப்படையில்தான் நேற்று ஷாகின் ஷா உ்ள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும் 3 பேர் வீடுகளில் போலீசார் இன்று சோதனை
நேற்று கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் கோவையில் முகமது அசாருதீன்(32), சதாம் உசேன்(26), அக்ரம் ஜிந்தா(26), அபுபக்கர் (29), இதயத்துல்லா(38), இப்ராஹீம் (28) ஆகியோரது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் மாநகர போலீசார் 60 பேர் இன்று அதிகாலை 4. 30 மணி முதல் கோவை அன்புநகரில் உள்ள ஷாஜகான், உக்கடம் வின்சென்ட் ரோட்டிலுள்ள முகமது உசைன், கரும்புக்கடையிலுள்ள ஷேக் ஷபியுல்லா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘நேற்று விசாரணை நடத்தப்பட்ட 6 பேர் தவிர, இந்த 3 பேரும் (ஷாஜகான், முகமது உசைன், ஷேக் ஷபியுல்லா) வாட்ஸ் அப், முகநூலில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்படுகிறது’ என்றனர்.

.

மூலக்கதை