கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க தர்மயுத்த நாயகரே வாருங்கள்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க தர்மயுத்த நாயகரே வாருங்கள்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டர்

ஆண்டிபட்டி: அதிமுகவின் போஸ்டர் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் போஸ்டர் யுத்தத்தில் குதித்துள்ளனர்.

‘கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்’ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளராக அமைச்சர் செங்கோட்டையனை அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சிவங்கை மாவட்டத்தில் போஸ்டர்களை ஒட்டினர். இந்த போட்டாபோட்டியில் தற்போது துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் குதித்துள்ளனர்.



தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை ஓபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில், ‘புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.

கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும். இவண்: தர்மயுத்த தொண்டர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் போஸ்டரில் ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் படம், நடிகர் ஏ. வெள்ளைப்பாண்டியன், ஆண்டிபட்டி முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனால் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை