தடைக்காலம் நாளை முடிகிறது கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தடைக்காலம் நாளை முடிகிறது கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதால், 15ம் தேதி அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர். தமிழக கடலில் மீன்களை பாதுகாக்கும் வகையில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஏப். 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரையிலான 60 நாட்கள், மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி மற்றும் வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

தடைக்காலத்தில் நாட்டுப்படகு மீனவர்களால் பிடித்து வரப்பட்ட மீன்களின் விலையும் பலமடங்கு அதிகரித்தது. மீன்பிடி தடையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

அவர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

தடைக்காலத்தில் ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் பாம்பனில் விசைப்படகுகளை கரையில் ஏற்றி சீரமைக்கும் பணி நடந்தது. மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல குழுக்களாக சென்று, பழுது நீக்கி சீரமைக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்து, மீன்பிடி உரிமத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சீரமைத்து புதுப்பிக்கப்பட்ட விசைப்படகுகள் கடலில் இறக்கப்பட்டு மீன் பிடிக்க செல்ல வசதியாக தயார் நிலையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜூன் 14) நள்ளிரவு 12 மணியுடன் மீன்பிடி தடை முடிவதால், நாளை மறுநாள் (ஜூன் 15) அதிகாலை முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட படகுகள் சீரமைக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்ட நிலையில், தேவையான மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் டீசல் போன்றவற்றை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரை துறைமுகங்கள் பரபரப்பாக காட்சியளிக்கின்றன.

ராமேஸ்வரம், மண்டபம் மீன்துறை அலுவலகத்திலும் ஆவணங்கள் சரிபார்ப்பது, அடையாள அட்டை வழங்குவது என அதிகாரிகளும், ஊழியர்களும் மும்முரமாக உள்ளனர். பாக் ஜலசந்தி கடலுக்கு செல்லும் மீனவர்கள் இறால் மீன் பிடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

தடை முடிந்து செல்வதால் டன் கணக்கில் இறால் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறால் வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் ராமேஸ்வரம் வரத் துவங்கியுள்ளனர். இதேேபால் நாகை, சென்னை மீனவர்களும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தீவிர கண்காணிப்பில் இலங்கை
தமிழக மீனவர்கள் நாளை முதல் மீன் பிடிக்க செல்லவுள்ள நிலையில் இலங்கை கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டு கடற்படையினரின் ரோந்து கப்பல்கள் தலைமன்னார், கச்சத்தீவு, நெடுந்தீவு கடல் பகுதியில் நேற்று முதலே சுற்றிச் சுற்றி வருகின்றன.

.

மூலக்கதை