தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை

தினமலர்  தினமலர்
தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை

மெக்சிகோ : தேளின் விஷத்தில் இருந்து காசநோக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள். இந்த மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் தமிழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் மற்றும் மெக்சிகோ விஞ்ஞானிகள் இணைந்து தேளின் விஷத்தில் இருந்து காசநோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்தினை கண்டுபிடித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகள் குழுவினர் தேள், பாம்பு, நத்தை உள்ளிட்ட விஷதன்மை கொண்ட உயிரினங்களில் இருந்து மருந்து கண்டறியும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
உலகில் மிக விலையுயர்ந்த பொருட்களில் தேளின் விஷமும் ஒன்று. இதன் ஒரு கேலன் (gallon - அமெரிக்க அளவு மதிப்பு. ஒரு கேலன் என்பது 3.78 லிட்டருக்கு சமம்) தயாரிக்க 39 மில்லியன் டாலர்கள் ஆகும். டிப்ளோசென்டிரஸ் மெலிசி என்ற அரிய வகை தேளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக இந்த வகை தேள் இனங்கள் மழை காலங்கள் மற்றும் வறட்சியான காலங்களில் மட்டுமே காணப்படக் கூடியவை.

விஞ்ஞானி பொசானி தலைமையிலான குழுவினர் கடந்த 45 ஆண்டுகளாக விஷ காரணிகளில் இருந்து மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதுற்கு முன் இவர்கள் ஆன்டிபயோடிக்ஸ், பூச்சிக்கொல்லிகள் மற்றும் மலேரியாவுக்கு எதிரான மருந்துகளை சிலந்தியின் விஷத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.
டிப்ளோசென்டிரஸ் மெலிசி தேளின் வால் பகுதியில் உள்ள விஷதன்மை கொண்ட திரவத்தை பிரித்தெடுத்துள்ளனர். அதில், சிவப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் மாறக் கூடிய இருவிதமான வேதிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 0.5 மைக்ரோ லிட்டர் விஷயத்தை எடுத்து ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலை.,யை சேர்ந்த ஷிப்தாஸ் பானர்ஜி மற்றும் ஞானமணி ஏழுமலை என்ற இரு இந்திய விஞ்ஞானிகள், வட்ட வடிவிலான துகள்கள் ஆன்டிமைக்ரோபியல் தன்மையை கொண்டிருந்ததை கண்டிறிந்தனர். இவற்றில் காசநோய்க்கு காரணமாக பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதில் ஞானமணி ஏழுமலை காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். புதுச்சேரியில் பி.எச்டி முடித்தவர். தற்போது ஸ்டான்போர்டு பல்கலையில் பணிபுரிகிறார்..

மூலக்கதை