காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு முத்தலாக் மசோதா விரைவில் தாக்கல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு முத்தலாக் மசோதா விரைவில் தாக்கல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கவும், முத்தலாக் மசோதாவை, வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மீண்டும் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடக்கிறது. 19ம் தேதி மக்களவைக்கு புதியதாக சபாநாயகர் தேர்வு நடக்கிறது. இதற்கிடையே, 17 மற்றும் 18ம் தேதிகளில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜ எம்பி வீரேந்திர குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜூலை 5ம் தேதி 2019-20ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின், மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இங்கு கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி முதல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அது வரும் ஜூலை 2ம் தேதியுடன் முடிகிறது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. * ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையை ஒட்டி வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, தொழிற்கல்வி படிப்புகளுக்கான அட்மிஷன் ஆகியவற்றில் தனி இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா-2019 கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது காஷ்மீர் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். * வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய முத்தலாக் மசோதாவை மீண்டும் தாக்கல் ெசய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முத்தலாக் தடுப்பு மசோதா கடந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களைவயில் நிலுவையில் இருந்தது. 16வது மக்களவை முடிந்துவிட்டதால், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா காலாவதியாகிவிட்டது. இதனால் புதிய முத்தலாக் மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.* ஆதார் சட்ட திருத்த மசோதா 2019-ஐ வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதார் அட்டையை, தானாக முன்வந்து அடையாள அட்டையாக தாக்கல் செய்ய  வகையில் இதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை