அடுத்த மாதம் 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-2: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

தினகரன்  தினகரன்
அடுத்த மாதம் 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்2: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

பெங்களூரு: ‘‘ஜூலை 15ம் தேதி ‘சந்திராயன்-2’ நிலவை நோக்கி பயணத்தை தொடங்குகிறது,’’ என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார். சந்திரனில் நீர், கனிம வளம் இருக்கிறதா? என்பதை அறிவதற்கான  முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சந்திராயன்-1 விண்கலத்தை ஏற்கனவே நிலவுக்கு  அனுப்பி சாதனை படைத்த இந்தியா, தற்போது சந்திராயன்-2 என்ற திட்டத்தை  செயல்படுத்தவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக பெங்களூருவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று அளித்த பேட்டி: நிலவை  பற்றி அறிவதற்கான முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. நிலவின் வட  துருவத்தில் நீர் இருப்பதை சந்திராயன்- 1 உறுதி செய்தது. அதே  வரிசையில் இப்போது சந்திராயன்-2  திட்டம்  தயாராகி விட்டது. கடந்த முறை போலின்றி, சந்திராயன்-2 திட்டத்தில் ரோவர், லேண்டர் என்ற இரண்டு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இம்முறை  சந்திரனின் வெளிவட்ட பாதையில் சந்திராயன் - 2 நிலை நிறுத்தப்படும். பிறகு, லேண்டர் தனது பயணத்தை தொடங்குகிறது. 5 கட்டமாக, நிலவை நோக்கி செல்கிற லேண்டரில் இருந்து  ரோவர் கருவி கீழே இறங்குகிறது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய பிறகுதான்  உண்மையான சவாலை நாங்கள் எதிர்பார்க்கிறோம். லேண்டர் கதவு திறந்த 15  நிமிடத்தில் ரோவர் கருவி நிலவில் கால் பதிக்கும். அதன் பிறகு லேண்டர்  மற்றும் ரோவர் இடையே எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. சந்திராயன்-2  திட்டத்தின் முக்கியமான பகுதியான ரோவர் ஒரு நிலவு நாள், அதாவது (14 நாள்)  உயிர்ப்புடன் செயல்படும். சந்திராயன்- 1  நிலவின் வடக்கு பகுதியை ஆராய்ந்தது. சந்திராயன்-2 நிலவின் தெற்கு  பகுதியிலுள்ள கனிமம், தனிமம் ஆகியவற்றை ஆராயும் வகையில்  வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு நிலவு பயணத்தை  மேற்கொள்ளும் சந்திராயன்-2, செப்டம்பர் மாதம் 6 அல்லது 7ம்  தேதிகளில்  நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கிறோம். லேண்டர் எந்த தேதியில்  தரையிறக்குவது என்பது இயற்கை சூழலுக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும்.  சந்திராயன்-2  இஸ்ரோவின் திட்டம் கிடையாது; ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு   பெருமை சேர்க்கும் திட்டம். ரோவர் வாகனத்தின் சக்கரத்தின் ஒரு  பக்கத்தில் அசோக சக்கரமும், மறுபக்கத்தில் இஸ்ரோவின் சின்னமும் இடம்  பெற்றிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.‘அனைவருக்கும் பலன் தரும்’தனது பேட்டியில் கே.சிவன் மேலும் கூறுகையில், ‘‘‘சந்திராயன்-1 திட்டத்தை விட சந்திராயன்-2 மிகவும் நுட்பமானது. சவால்  மிகுந்தது. சென்சார்கள், தகவல் தொடர்பு கருவிகள், மென்பொருள் உள்ளி–்ட்டவை  மிகவும் சிறப்பானவை. இத்திட்டத்தில் சீனாவின் உதவி நமக்கு தேவையில்லை. அதை  கேட்கவும் இல்லை. ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் இதற்காக  பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரோவில் 30 சதவீதம் பெண் விஞ்ஞானிகள்  பணியாற்றி வருகின்றனர். ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி திறமைக்கு நாங்கள்  மதிப்பு அளிக்கிறோம். நிலவில் என்ன இருக்கிறது என்பதை அறிவது மட்டும்  எங்களின் நோக்கம் கிடையாது. தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைய  வேண்டும் என்பதற்கான ஒரு முயற்சியே இது. இஸ்ரோ இன்று விதைத்துள்ள  விதை, எதிர்காலத்தில் மிகப்பெரிய மரமாக செழித்து வளர்ந்து அனைவருக்கும்  பலன் கொடுக்கும்,’’ என்றார்.

மூலக்கதை