5வது இடம்! 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடலூர்...10 ஆண்டுகளில் 4.16 லட்சம் பேர் பயன்

தினமலர்  தினமலர்
5வது இடம்! 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடலூர்...10 ஆண்டுகளில் 4.16 லட்சம் பேர் பயன்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 582 பேர், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் கடலுார் மாவட்டம் மாநிலத்தில் 5 வது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் சாலை விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும் உடல் நிலை சரியில்லாமல் குறித்த நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறமுடியாமல் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி தமிழகத்தில் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது. விபத்து, பிரசவம் உள்ளிட்ட அனைத்து அவசர சிகிச்சைகளுக்கும் 108 ஆம்புலன்சை அழைத்தால், உடன் அழைப்பு வந்த இடத்திற்கு விரைந்து நோயாளிகளுக்கு முதல் உதவி செய்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்.இந்திட்டம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடலுார் மாவட்டத்தில் கடலுார் முதுநகர், புதுநகர், கடலுார் அரசு மருத்துவமனை, ஆலப்பாக்கம் ரயில்வே கேட், சங்கொலிகுப்பம், புதுச்சத்திரம், பு.முட்லுார், புவனகிரி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, முத்தாண்டிக்குப்பம், வடலுார், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, காட்டுமன்னார்கோவில், பாளையங்கேட்டை, ஸ்ரீமுஷ்ணம், கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம் (இரண்டு இடங்களில்) தொழுதுார், வேப்பூர், திட்டக்குடி, பெண்ணாடம், மந்தாரக்குப்பம், கம்மாபுரம், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட 35 இடங்களில் தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பல்வேறு வசதிகளுடன் விரிவு படுத்தப்பட்டு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் தமிழக அளவில் காஞ்சிபுரம் முதல் இடத்தையும், வேலுார் இரண்டாவது இடத்தையும், விழுப்புரம் மூன்றாவதும், சென்னை நான்காம் இடத்தையும், கடலுார் மாவட்டம் 5 வது இடத்திலும் உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் கடலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 582 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில் விபத்தில் பாதிக்கப்பட்ட 75 ஆயிரத்து 285 பேரும், பிரசவத்திற்காக 1 லட்சத்து 5 ஆயிரத்து 940 பேரும், தற்கொலை முயற்சி, தகராறு, பாம்பு கடித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 2 லட்சத்து 35 ஆயிரத்து 357 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.108 ஆம்புலன்ஸில் தற்போது ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ். பொறுத்தப்படுவதற்கு முன்பு அழைப்பு வந்த 15 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
தற்போது ஜி.பி.எஸ்.,கருவி பொறுத்திய பின் 13 நிமிடத்தில் சென்று முதல் உதவி அளித்து பின் அருகில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்க்கின்றனர்.கடலுார் தலைமை அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் இலவசமாகவே அனுப்பி வருகின்றனர்.

மூலக்கதை