வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி | ஜூன் 12, 2019

தினமலர்  தினமலர்
வார்னர் சதம்: ஆஸி., அசத்தல் வெற்றி | ஜூன் 12, 2019

டான்டன்: உலக கோப்பை லீக் போட்டியில் டேவிட் வார்னர் சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் போராட்டம் வீணானது.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் நீக்கப்பட்டு ஷஹீன் அப்ரிதி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஷான் மார்ஷ் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

பின்ச் அரைசதம்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் ஓவரை முகமது ஆமிர், ‘மெய்டனாக’ வீசினார். ஷஹீன் அப்ரிதி பந்தில் ஒரு சிக்சர் அடித்த பின்ச், வகாப் ரியாஸ் வீசிய 13வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். ஹபீஸ் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த பின்ச், அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ஹபீஸ் வீசிய 21வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த போது ஆமிர் ‘வேகத்தில்’ பின்ச் (82) வெளியேறினார்.

வார்னர் விளாசல்: ஹசன் அலி வீசிய 24வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய வார்னர், சோயப் மாலிக் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் (10) நிலைக்கவில்லை. ஹபீஸ் வீசிய 33வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் (20), ஷஹீன் அப்ரிதி பந்தில் போல்டானார். ஷஹீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய வார்னர், ஒருநாள் அரங்கில் தனது 15வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய இவர், 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆமிர் அசத்தல்: பின் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு ஆமிர் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ உஸ்மான் கவாஜா (18), ஷான் மார்ஷ் (23) வெளியேறினர். நாதன் கூல்டர்–நைல் (2), பட் கம்மின்ஸ் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஆமிர் வீசிய 49வது ஓவரில் அலெக்ஸ் கேரி (20), மிட்சல் ஸ்டார்க் (3) சரணடைந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில், 307 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. கேன் ரிச்சர்ட்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின் கேப்டன் சர்பராஸ் அகமது, வகாப் ரியாஸ் இணைந்து போராடினர். மேக்ஸ்வெல் வீசிய 41வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த வகாப், கூல்டர்–நைல் பந்தில் 2 சிக்சர் விளாசினார். எட்டாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ஸ்டார்க் ‘வேகத்தில்’ வகாப் (45) அவுட்டாக, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு மங்கியது. முகமது ஆமிர் (0) ஏமாற்றினார். சர்பராஸ் (40) ‘ரன்–அவுட்’ ஆனார்.

பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில், 266 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. ஷஹீன் அப்ரிதி (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

‘வேகத்தில்’ மிரட்டிய பாகிஸ்தானின் முகமது ஆமிர், 10 ஓவரில், 30 ரன் மட்டும் வழங்கி, 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2009ல் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன் வழங்கி, 4 விக்கெட் கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

* தவிர, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் சார்பில் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 7வது பவுலரானார். ஏற்கனவே அப்ரிதி, வாசிம் அக்ரம், சக்லைன் முஸ்தாக், அப்துல் காதிர், வகாப் ரியாஸ், சோகைல் கான் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், 15வது சதம் (108 இன்னிங்ஸ்) அடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் குறைந்த இன்னிங்சில், 15வது சதமடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை இந்தியாவின் ஷிகர் தவானுடன் (108 இன்னிங்ஸ்) பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (86 இன்னிங்ஸ்), இந்தியாவின் கோஹ்லி (106) உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த 5வது துவக்க ஜோடியானது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் கிரீனிட்ஜ்–ஹெய்ன்ஸ் (132 ரன், 1979, இடம்: ஓவல்), ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர்–டவேர் (115 ரன், 1983, இடம்: மான்செஸ்டர்), வெஸ்ட் இண்டீசின் ஹெய்ன்ஸ்–லாரா (175* ரன், 1992, இடம்: மெல்போர்ன்), இங்கிலாந்தின் ராபின் ஸ்மித்–மைக்கேல் ஆதர்டன் (147 ரன், 1996, இடம்: கராச்சி) ஜோடிகள் இந்த இலக்கை எட்டின.

ஆஸ்திரேலிய அணி 41 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 9வது (2017–19) வெற்றியை பதிவு செய்தது. தவிர, ஒருநாள் போட்டி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை விண்டீசுடன் (9 வெற்றி, 1992–93) பகிர்ந்து கொண்டது.

முதலிரண்டு இடங்களில் முறையே தென் ஆப்ரிக்கா (15 வெற்றி, 1995–2000), நியூசிலாந்து (12 வெற்றி, 2014–18) அணிகள் உள்ளன.

கடைசி கட்டத்தில் வகாப் ரியாஸ் வெளுத்து வாங்க ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இந்த சமயத்தில் 45வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இவரது இரண்டாவது பந்தை வகாப் அடிக்க, அதை கீப்பர் கேரி கச்சிதமாக பிடித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் ‘அப்பீல்’ செய்தனர். கள அம்பயர் ருச்சிரா பல்லியாகுருகே (இலங்கை) ‘அவுட்’ தர மறுத்தார். ‘ரிவியு’ கேட்க லேசான தயக்கம் காணப்பட்டது. இதற்கான 15  வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கடைசி ஒரு வினாடி இருக்கும் போது ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ‘ரிவியு’ கேட்டார். இதில், பந்து பேட்டில் உரசிச் சென்றது உறுதி செய்யப்பட,  வகாப் அவுட்டானார். அந்த ஒரு வினாடியில் ‘ரிவியு’ கேட்க முடிவு செய்தது ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்டது.

மூலக்கதை