இயக்குநர், துணை செயலர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து அரசு பணிக்கு நியமனம்: மத்திய அரசு திட்டம்

தினகரன்  தினகரன்
இயக்குநர், துணை செயலர் பதவிகளுக்கு தனியார் துறையில் இருந்து அரசு பணிக்கு நியமனம்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: இயக்குநர், துணை செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையில் உள்ளவர்களை பணியில் அமர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் இயக்குநர்கள், துணை செயலாளர்கள் பங்கு முக்கியமானது. இந்த பதவிகளுக்கு குரூப் ஏ மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஐஏஎஸ் மற்றும் பணி அனுபவம் மிக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு  வழங்கப்படும்.  இந்த நிலையில், தனியார் துறையில் இருந்து மேற்கண்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய பணியாளர் மற்றும்  பயிற்சித்துறை செயலாளர் சந்திரமவுலி கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தனியார் துறையில் இருந்து முதல் கட்டமாக 40 பேர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இவர்களின் பணிக்காலம் குறிப்பிட்ட நிலையான கால அளவாக நிர்ணயிக்கப்படும். தனியார் துறை நிபுணர்களை உயர்  பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய அவசியம் குறித்து நிதி ஆயோக் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. இந்த அமைப்பிலும் துணை செயலாளர் பதவி முதல் இணை செயலாளர் பதவி வரை தனியார் துறை நிபுணர்களை பணியமர்த்த  பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது என்றனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். (யுபிஎஸ்சி) கடந்த ஏப்ரல் மாதம் தனியார் துறை நிபுணர்கள் 9 பேரை இணை செயலாளர் பதவிக்கு தேர்வு செய்தது. பணியாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம  இணைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பதவிகளுக்கு தனியார் துறைகளில் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு 6,077 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை