2,100 பீகார் விவசாயிகளின் வங்கிக் கடனை அடைத்த அமிதாப்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார்

தினகரன்  தினகரன்
2,100 பீகார் விவசாயிகளின் வங்கிக் கடனை அடைத்த அமிதாப்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினார்

மும்பை: பீகாரை சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடன் நிலுவையை பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் அடைத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் மழையின்றி விவசாயம் பொய்த்துப் போனதால், வங்கியில் கடன் பெற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் மனவேதனையில் தற்கொலை செய்து வருகின்றனர். சில மாநிலங்களில் மட்டும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 2,100 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து அடைத்து பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உதவியுள்ளார். இது குறித்து அமிதாப் தன்னுடைய பிளாக்கில் கூறியிருப்பதாவது:கடனை செலுத்துவதாக ஏற்கனவே கொடுத்திருந்த என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் வங்கி கடன் ஒரே தவணையில் செலுத்தப்பட்டது. அவர்களில் சில விவசாயிகளை ஜானக்கிற்கு நேரடியாக வரவழைத்து ஸ்வேத்தா, அபிஷேக்கின் கைகளால் பணத்தை வழங்கினோம். இதைத் தொடர்ந்து, புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக இன்னுயிரை நீத்த ராணுவ  வீரர்களின் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற சிறிய நிதி உதவி செய்வதுதான் எனது அடுத்த கடமை.இவ்வாறு அமிதாப் பதிவிட்டுள்ளார்.இதற்கு முன்னர் கடந்தாண்டு நவம்பரில் உபி.யை சேர்ந்த 1,398 விவசாயிகள், அக்டோபரில் மகாராஷ்டிராவை சேர்ந்த 350 விவசாயிகளின் வங்கி கடனை அமிதாப் பச்சன்  செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை