மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதால் மேகதாது அணை கட்டுமான பணியை தொடங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கர்நாடக துணை முதல்வர் உத்தரவு

தினகரன்  தினகரன்
மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டதால் மேகதாது அணை கட்டுமான பணியை தொடங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கர்நாடக துணை முதல்வர் உத்தரவு

பெங்களூரு: ‘‘மேகதாது அணை பணியை தொடங்க  வேண்டும்,’’ என்று கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வர் உத்தரவிட்டார்.பெங்களூரு  விதானசவுதாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நீர்ப்பாசனம் மற்றும்  பொதுப்பணி துறை பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில்  துணை முதல்வர் பரமேஸ்வர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதில், பரமேஸ்வர் பேசியதாவது: கர்நாடகாவில் செயல்படுத்தி வரும் நீர்ப்பாசன  திட்டங்களை முடிப்பதற்காக பட்ஜெட்டில் 34 சதவீதம் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி எவ்வளவு விரைவில் பணி முடிக்க  வேண்டுமே, அவ்வளவு சீக்கிரம் முடிக்க  வேண்டும். பெங்களூரு மாநகரின்  குடிநீர் தேவைக்காக காவிரி நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நான்கு கட்ட பணிகள்  முடிக்கப்பட்டு, ஐந்தாம் கட்ட பணி தொடங்கியுள்ளோம். இத்திட்டம்  செயல்படுத்துவதின் மூலம் ஓரளவுக்கு குடிநீர் பிரச்னையை  தீர்க்க முடியும்.  ஆனால், மாநகரின் வளர்ச்சியை தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கும்போது, தற்போது  செயல்படுத்தி வரும் குடிநீர் திட்டங்கள் போதுமானதாக இல்லை. இதை கருத்தில்  கொண்டு காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில்  அணை கட்ட அரசு  திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச அளவில் டெண்டர் விட்டு திட்ட வரைவு  தயாரித்து மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசும்  அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்த  ஏதாவது சட்ட சிக்கல்  இருக்குமானால், அதை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தீ்ர்வு காண்பதுடன்  விரைவில் அணை கட்டும் திட்ட பணியை அதிகாரிகள் தொடங்க வேண்டும் என்றார்.கூட்டத்திற்கு  தலைமையேற்ற முதல்வர்  குமாரசாமி பேசும்போது, ‘‘மாநில அரசு செயல்படுத்த  திட்டமிட்டுள்ள மேகதாது அணை கட்டும் திட்டம் மிகவும் மகத்துவமானது.  பெங்களூரு மாநகரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இத்திட்டத்திற்கு  முன்னுரிமை கொடுத்துள்ளோம்.  மேகதாதுவில் அணை கட்டுவதின் மூலம் பெங்களூரு  மாநகருக்கு மட்டும் பலன் கொடுப்பது மட்டுமில்லாமல் மழை காலத்தில்  இருமாநிலங்களில் உள்ள அணைகளில் சேமிக்கும் தண்ணீர் போக 100 டிஎம்சி  தண்ணீருக்கும் அதிகம் கடலில்  கலக்கிறது. அதை மேகதாதுவில் அணை கட்டுவதின்  மூலம் தடுத்து நிறுத்தினால் இரு மாநில விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  இத்திட்டம் செயல்படுத்த துரிதப்படுத்த வேண்டும். மேலும் பெங்களூரு ஊரகம்,  பெங்களூரு நகரம், கோலார்,  சிக்கபள்ளாபுரா, துமகூரு மாவட்டங்களில் நிலவும்  குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண எத்தினஹோள திட்டம் செயல்படுத்தி வருகிறோம்’’  என்றார்.

மூலக்கதை