பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று காலை நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார். இங்கு இந்தாண்டு பிரமோற்சவ விழா கடந்த மே 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான அடியார்கள் நால்வர்களான சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் எழுந்தருளிய புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 5ம் தேதி இரவு நடைபெற்றது. கடந்த 7ம் தேதி செண்பகத் தியாகராஜர் சுவாமி வசந்த மண்டபத்தில் இருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது தியாகராஜர் ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பாள் சமேத தர்பாரண்யேஸ்வரர் மற்றும் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு சகோபுர வீதியுலா நடைபெற்றது.

மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணியளவில் நடந்தது. சொர்ண கணபதி, வள்ளி சமேத சுப்பிரமணியர், செண்பக தியாகராஜர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.

முதலாவதாக சொர்ண கணபதி தேர் புறப்பட்டது. அடுத்தடுத்து வள்ளி சமேத சுப்பிரமணியர், செண்பக தியாகராஜர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் புறப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

நாளை இரவு சனிபகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், 14ம் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

.

மூலக்கதை