சவுடு மணல் விற்பனை அதிகரிப்பு: அரசு குவாரி மூடல் எதிரொலி

தினமலர்  தினமலர்
சவுடு மணல் விற்பனை அதிகரிப்பு: அரசு குவாரி மூடல் எதிரொலி

கடலுார்: கடலுார் பகுதியில் கட்டுமானப் பணிக்கு ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக, சவுடு மணல் விற்பனை அதிகரித்துள்ளது.
கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் அடுத்த வான்பாக்கம் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில், அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது.மாவட்ட சுற்றுச்சூழல் ஆணையம் மற்றும் கலெக்டரின் அனுமதி பெற்று, இந்த குவாரி இயங்கி வந்தது. இங்கிருந்து அனுமதி பெற்று, ஆற்று மணல் கொள்முதல் செய்து, லாரிகளில் விற்பனைக்கு கொண்டு சென்றனர்.வான்பாக்கம் அரசு மணல்குவாரியில், விதிமுறை மீறல் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் அரசு மணல் குவாரிகளில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பல இடங்களிலும் மணல் குவாரிகள் மூடப்பட்டன.இதேபோல், கடலுார் மாவட்டம், வான்பாக்கத்தில் உள்ள அரசு மணல் குவாரியும், கடந்த ஓராண்டுக்கு முன் மூடப்பட்டது. இதன் காரணமாக கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு, ஆற்று மணல் கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டது.பல கட்டுமான நிறுவனங்கள், மணலுக்கு மாற்றாக கிரஷர் பவுடரை பயன்படுத்த துவங்கி விட்டன. மேலும், புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் பலரும், சவுடு மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சவுடு மணல் இரண்டரை யூனிட் ரூ.15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில், முழு திருப்தி இல்லாவிட்டாலும், வேறு வழியின்றி பொதுமக்கள், சவுடு மணலை பயன்படுத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தில், ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதிதாக வீடு கட்டும், நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில், அரசு விதிமுறைப்படி மீண்டும் மணல் குவாரி ஏற்படுத்த வேண்டும். அரசு மணல் குவாரியில், அளவுக்கு மீறி மணல் எடுப்பதை தவிர்க்க, அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், திருட்டு மணல் விற்பனையை தடுக்க முடியும்.

மூலக்கதை