கோவில் திருமண மண்டபத்திற்கு பூட்டு: பணி முடிந்தும் திறக்காதது ஏன்?

தினமலர்  தினமலர்
கோவில் திருமண மண்டபத்திற்கு பூட்டு: பணி முடிந்தும் திறக்காதது ஏன்?

கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், கோவில் திருமண மண்டபம் திறக்கப்படாதது, பீர்க்கன்காரணை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட, ஸ்ரீனிவாசா நகரில், பிரசித்தி பெற்ற, சூராத்தம்மன் கோவில் உள்ளது.அறநிலையத்துறைஇக்கோவில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதை, 1973ல் இருந்து, முன்னாள் சபாநாயகர், முனுஆதி குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். 2009ல் அறநிலையத் துறை வசம், இக்கோவில் ஒப்படைக்கப்பட்டது.மொத்தம், 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, இக்கோவில் வளாகத்தினுள், பொதுமக்களின் வசதிக்காக, 4,800 சதுரடி பரப்பளவில், தனியார் பங்களிப்புடன், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 2013ம் ஆண்டு, திருமண மண்டபம் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும், மண்டபம் திறக்கப்படவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள், அறநிலையத்துறை மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:மண்டபம் கட்டுமான பணிக்காக, ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய, 2.77 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. பணத்தை வழங்கக் கோரி, பல முறை அவர் கோரிக்கை விடுத்தும், அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

கும்பாபிஷேகம் இந்த பிரச்னையால், இன்று வரை, திருமண மண்டபம் திறப்பதில் இழுபறி நீடிக்கிறது. கோவில் மண்டபம், பயன்பாட்டிற்கு வந்தால், சுற்றியுள்ள ஏழை, எளியோர் பயன்பெறுவர்.நாளை மறுதினம் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று, அன்றே, மண்டபத்தையும் திறக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அறநிலையத் துறை அதிகாரி, ஒருவர் கூறுகையில், 'ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய பணத்திற்கும், மண்டபம் திறப்புக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. மண்டபம் திறப்பது குறித்து, உயர் அதிகாரிகளும், அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

அமைச்சர் கவனத்திற்கு சென்றதா?அறநிலையத்துறை கோவிலுக்கு சொந்தமான மண்டபம், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருப்பதால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவதுடன், கோவிலுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் தடுக்கப்படுகிறது. கோவில் உள்ள பகுதியில், தனியார் திருமண மண்டபங்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால், அந்த மண்டப உரிமையாளர்கள், அதிகாரிகளை, 'கவனித்து' கோவில் மண்டபத்தை திறக்கவிடாமல் தடுக்கின்றனரோ என்ற சந்தேகம், மக்களுக்கு எழுந்துள்ளது. இந்த விவகாரம், அறநிலையத்துறை அமைச்சர் கவனத்திற்கு சென்றதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

மூலக்கதை