ஹாங்காங்கிலும் 'தியானென்மென்' தாக்குதல்? உலக நாடுகள் அச்சம்

தினமலர்  தினமலர்
ஹாங்காங்கிலும் தியானென்மென் தாக்குதல்? உலக நாடுகள் அச்சம்

ஹாங்காங்கில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை சீனாவிற்கு கொண்டுசென்று விசாரிக்கும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பார்லிமென்ட் வளாகத்தை சுற்றி லட்சக்கணக்கானோர் குவிந்து வருவதால் சீனாவில் நடந்த தியானென்மென் கொடூர சம்பவம் போல நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீன கம்யூ., அரசின் அடக்குமுறையை எதிர்த்தும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் 1989ம் ஆண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர். இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலையை மிஞ்சும் விதத்தில், ஜூன் 4ல் தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்களை கொன்று குவித்தது சீன ராணுவம். போராட்டமும் முடிவுக்கு வந்தது.

அடுத்த தலைமுறை


மனித உரிமை மீறல், கொடூர சம்பவம் என பல உலகநாடுகள் கொந்தளித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. அது குறித்த எந்த தகவலும் அடுத்த தலைமுறைக்கு தெரியாத விதத்தில் சீனா செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.தற்போது சீனா அதே போன்ற பேராட்டத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்புபோல அடக்குமுறையை கையாள முடியாத நிலையில் சீனா உள்ளது. இதற்கு காரணம், போராட்டம் நடக்கும் இடம் ஹாங்காங்.பிரிட்டிஷார் வசம் 99 ஆண்டு குத்தகையில் இருந்த ஹாங்காங் சீனா வசம் 1997 ல் ஒப்படைக்கப்பட்டது. அப்போதே ஹாங்காங்கில் போராட்டங்கள் எழுந்தன. 'ஆனால் ஹாங்காங்கின் தனித்தன்மை பாதிக்கப்படாது, இறையாண்மை தொடரும்' என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது சீனா. அதன்பின் பேராட்டங்கள் அடங்கின. சிறப்பு அதிகாரியை நியமித்து ஹாங்காங்கின் நிர்வாகத்தை சீனா ஏற்றது.அதன்பின் படிப்படியாக சீன சட்டங்கள் அமலாகின. உள்ளூர் போலீசாருக்கு பதில் சீன போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஹாங்காங்கின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சீன கம்யூனிசம் அமலானது.

வெடித்தது போராட்டம்


இந்நிலையில் ஹாங்காங்கில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை சீனாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே சீனா மீது அதிருப்தியில் இருந்த ஹாங்காங் மக்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து போராட்டங்கள் துவங்கின. கடந்த வாரம் துவங்கிய போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் ஹாங்காங் பார்லிமென்ட் முன் சிறிய அளவில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். படிப்படியாக எண்ணிக்கை அதிகரித்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அவர்களை அகற்ற வழி தெரியாமல் நிர்வாகம் தவிக்கிறது.

வணிகர்களும் பங்கேற்பு


ஹாங்காங்கின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை தரும் சிறு கடைகள், வணிக நிறுவனங்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அனைவரும் போராட்டக்களத்தில் உள்ளனர்.சீன அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம், 'சட்டம் கொண்டு வருவதில் மாற்றம் கிடையாது. திட்டமிட்டபடி அமல்படுத்துவோம்' என கூறியுள்ளார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உச்சக்கட்ட அச்சம்


இதே போன்று 2014 ல் துவங்கிய போராட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பென்னிடாய் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமின்றி, அரசியலில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை போராட்டத்தை வலுவிழக்கச்செய்வது கடினம். ஆனாலும் தியாெனன்மென் சதுக்கத்தில் நடத்திய கொடூரத்தை சீனா இங்கும் அரங்கேற்றலாம் என்ற அச்சமும் உள்ளது. அதுபோல நடக்காது, உலகநாடுகள் அதை வேடிக்கை பார்க்காது என்பது ஹாங்காங் மக்களின் நம்பிக்கை.


ஹேஷ்டேக்


போராட்டத்திற்கு உலகின் ஆதரவை பெற ஹாங்காங் வணிகர்கள், மாணவர்கள் இணைந்து '612 ஸ்டிரைக்' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இது உலக அளவில் டிரெண்டிங் ஆகி சீனாவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.ஹாங்காங் என்பது பல காலசாரங்கள் இணைந்தது. பல நாட்டினரின் உழைப்பால்தான் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. இங்கு ஒற்றை கலாசாரத்தை திணிக்க சீனா முயன்றால் நாங்கள் விடுதலை கோரி போராட வேண்டியிருக்கும்' என ஹாங்காங்கை சேர்ந்த மீட் யோகா மையம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இது உலகம் முழுதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தள்ளி வைப்பு


ஹாங்காங் பார்லிமென்ட்டில் இந்த சட்டத்தை நிறைவேற்ற தேவையான மெஜாரிட்டி சீன அரசுக்கு உள்ளது. இங்குள்ள பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் சீன ஆதரவாளர்கள். எனவே தான் பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த சட்டத்தை இன்று நிறைவேற்ற எண்ணியிருந்தனர். ஆனால், போராட்டம் வலுத்து வருவதால் 20ம் தேதி வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

திருச்சபை அறிவிப்பு


துவக்கம் முதல் ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாமிற்கு ஆதரவாக இருந்த ஹாங்காங் கத்தோலிக்க திருச்சபை இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளது. மக்களின் கருத்துக்கு எதிராக உள்ள இந்த சட்டத்திற்கும், அமலாக்க முயற்சிக்கும் கேரி லாமுக்கும் தங்கள் ஆதரவு கிடையாது என அது அறிவித்துள்ளது.

நியூசிலாந்து மறுப்பு


சீனாவின் ஷாங்காய் நகரில் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய ஒருவர் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை சீனாவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹாங்காங் போராட்டங்களால் அவரை ஒப்படைக்க நியூசிலாந்து மறுத்துவிட்டது.

ஆபத்தான சட்டம்


சுதந்திரமின்றி இருக்கும் சீன நீதிமன்றங்களிடம் ஹாங்காங் மக்களை சிக்க வைக்க வைக்கும் முயற்சி இது. இந்த சட்டம் மிகவும் ஆபத்தானது' என அமெரிக்கா கூறியுள்ளது.எங்கள் நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டாம் என சீனா பதிலடி கொடுத்துள்ளது.

எங்களுக்கு தெரியும்


சீனாவில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய பலர் ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்துள்ளனர். குற்றவாளிகளின் சரணாலயமாக இந்நகர் மாறுவதை அனுமதிக்க முடியாது. தேவையற்ற போராட்டத்தை மக்கள் தவிர்க்க வேண்டும். போராட்டங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என எங்களுக்கு தெரியும்.
-கேரி லாம், ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி

மூலக்கதை