கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது. 'குறையொன்றுமில்லை!'

தினமலர்  தினமலர்
கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது. குறையொன்றுமில்லை!

கோவை:மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை, நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலவே, கோவை மாநகராட்சி நிர்வாகமும், பொதுமக்களிடம் குறை கேட்க திட்டமிட்டுள்ளது. குறைகளை தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். புகார்களை பெற தனி செயலியும் வரவிருக்கிறது.
தெருவிளக்கு, குடிநீர் வசதி, குப்பை அள்ளுதல், மழை நீர் வடிகால் துார்வாருதல், ரோடு போடுதல், புதிதாக கட்டடம் கட்டுவதற்கு வரைபட அனுமதி தருதல், வரி நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, மாநகராட்சி நிர்வாகம் அளித்து வருகிறது.சேவை குறைபாடு தொடர்பாக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை, 0422-2390 261-63 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.
மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' எண், 81900 00200க்கு புகைப்படங்களுடன் அனுப்பலாம்.74404 22422 என்ற மொபைல் போன் எண்ணுக்கு, குறைகளை எஸ்.எம்.எஸ்., வடிவில் அனுப்பலாம். இல்லையெனில், [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு, குறைகளை அனுப்பலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள், சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, சரி செய்யப்படுகின்றன.இதையும் தாண்டி, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தை போலவே, அதே நாளன்று, மாநகராட்சியிலும் குறை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாரந்தோறும் திங்கட்கிழமை காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை பொதுமக்களிடம் குறை கேட்க, கமிஷனர் முடிவு செய்துள்ளார்.மொபைல் செயலியும் வருகிறது!மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், ''நாளிதழ்களில் சுட்டிக்காட்டப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி அதிகாரி நியமிக்க உள்ளோம்.
மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் விரைவில் துவக்கப்படும். குறைகளை தெரிவிக்க, பிரத்யேக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தலாம். மாநகராட்சி சேவை எதுவாக இருந்தாலும், அச்செயலியை உபயோகித்தால், தீர்வு கிடைக்கும். விரைவில் இச்செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறோம்,'' என்றார்.

மூலக்கதை