குளூஸ்னர் வழியில் பாண்ட்யா: ஸ்டீவ் வாக் பாராட்டு | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
குளூஸ்னர் வழியில் பாண்ட்யா: ஸ்டீவ் வாக் பாராட்டு | ஜூன் 11, 2019

லண்டன்: ‘‘தென் ஆப்ரிக்காவின் குளூஸ்னர் போல பாண்ட்யா செயல்படுகிறார்,’’ என, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து போட்டிகளில் இந்தியா வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின்  ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா அசத்தினார். 27 பந்தில் 48 ரன்கள் விளாசிய இவர், அணி 300 ரன்களை தாண்ட கைகொடுத்தார்.

இது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டார். எதிரணிக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறார். எதிரணியின் எந்த ஒரு கேப்டனாலும், இவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 1999ல் நடந்த உலக கோப்பை தொடரில், தென் ஆப்ரிக்க ‘ஆல் ரவுண்டர்’ குளூஸ்னர் இப்படித்தான் செயல்பட்டார். பின்வரிசையில் களமிறங்கியபோதும், அணிக்கு கைகொடுத்தார். தொடர் நாயகன் விருதை வென்ற இவரைப்போல, தற்போது பாண்ட்யாவும் ஜொலிக்கிறார்.

ஏமாற்றம் வேண்டாம்

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தது போல இல்லை. பீல்டிங்கிலும் ஏமாற்றியதால் தோல்வி அடைய நேரிட்டது. நல்ல நிலையில் இருந்த, துவக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச், ‘ரன் அவுட்’ ஆனது ஆட்டத்திற்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த தோல்வியால், ஆஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைய வேண்டாம். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பேட்டிங் வரிசை குறித்து சிந்திப்பது அவசியம். இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரும், தேவைக்கேற்ப சிறப்பாக விளையாடுகின்றனர். நெருக்கடியான நிலையிலும், திட்டத்தை திறம்பட செயல்படுத்துகின்றனர். இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆறு அணிகள் கோப்பை வெல்லும் போட்டியில் உள்ளன. இவ்வாறு ஸ்டீவ் வாக் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் எல்லை அருகே நின்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்மித்திற்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு, மைதானத்திலேயே இந்திய கேப்டன் கோஹ்லி எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில்,‘‘ கோஹ்லி பல வழிகளில், தலைமைப்பண்பை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்மித்திற்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்களை கண்டித்தது மிகப்பெரிய செயல்,’’ என்றார்.

 

மூலக்கதை