கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது

தினமலர்  தினமலர்
கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது

மும்பை:ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி, கடந்த, 14 மாதங்களில், 35 ஆயிரத், 400 கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.



அனில் அம்பானியின் தலைமையில் இயங்கி வரும், ரிலையன்ஸ் குழுமம், 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனில் அம்பானி, கடந்த, 14 மாதங்களில், 35 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி விட்டதாகத் தெரிவித்தார். நிறுவனச் சொத்துகள் விற்பனை மூலம், இந்தத் தொகையை திரட்டி, கடனை அடைத்ததாகவும், அவர் கூறினார்.



அண்மையில், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஏழு நிறுவனங்களின் பங்குகள், கடும் சரிவைச் சந்தித்தன. மேலும், இந்நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து இதுவரை, 65 சதவீதத்துக்கும் மேலான சந்தை மதிப்பிழப்பையும் சந்தித்தன.கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், நடப்பாண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில், 24 ஆயிரத்து, 800 கோடி ரூபாயை கடன் தொகையாகவும், 10 ஆயிரத்து, 600 கோடி ரூபாயை வட்டியாகவும் திருப்பிச் செலுத்தியுள்ளது,



ரிலையன்ஸ் குழுமம்.கடனை அடைக்கும் முயற்சியில் ஒன்றாக, ரிலையன்ஸ் குழுமம் அதன் ஸ்பெக்ட்ரம் வணிகத்தை,முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்க முன்வந்தது. இதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இம்முயற்சி நிறைவேறவில்லை.



இதற்கிடையே, எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய கடன் குறித்த வழக்கில், அனில் அம்பானியால் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த இயலாமல் போய்விட்டது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. 485 கோடி ரூபாயைச் செலுத்தாவிட்டால், மூன்று மாத சிறைத்தண்டனையைச் சந்திக்க வேண்டும் என்ற சூழலில், முகேஷ் அம்பானி இந்தத் தொகையை வழங்கிக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு முக்கிய வணிகத்தை விற்பனை செய்துள்ளார், அனில் அம்பானி. மும்பையில் உள்ள, ரிலையன்ஸ் பவர் வினியோக வணிகத்தை, அதானி குழுமத்துக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார். அடுத்து, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, மியூச்சுவல் பண்டு நிறுவனப் பங்குகளை, நிப்பான் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார்.



இவை தவிர, வானொலி சேவையான, ‘பிக்’ எப்.எம்., வணிகத்தின் பெரும்பான்மையான பங்குகளை, 1,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார்.காணொளிக் காட்சி மூலம், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:கடந்த, 14 மாதங்களில், 35,400 கோடி ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தியுள்ளோம். வேறு யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்காமல், வணிகங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட முயற்சிகளால் மட்டுமே, நிதியை திரட்டி, கடனை அடைத்துள்ளோம்.



ரிலையன்ஸ் குழுமம், அனைத்துக் கடன்களையும், குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப செலுத்திவிடும். இதற்காக, பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை