உலக கோப்பை கிரிக்கெட் 2019 இலங்கை-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை கிரிக்கெட் 2019 இலங்கைவங்கதேசம் இன்று பலப்பரீட்சை

பிரிஸ்டல்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளில் ஆடியுள்ளன. இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

பின்னர் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது. தனது முதல் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, அதிர்ச்சியளித்த வங்கதேச அணி, அதன் பின்னர் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் இலங்கை-வங்கதேச அணிகள் 3 முறை மோதியுள்ளன. 3 போட்டிகளிலுமே இலங்கை வென்றுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் முதன் முதலாக மோதின. அதில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

அப்போட்டியில் இலங்கை பவுலர் சமிந்தா வாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேச அணி 124 ரன்களுக்கு சுருண்டது.

மீண்டும் உலக கோப்பையில் இரு அணிகளும் டிரினிடாடில் கடந்த 2007ல் (மேற்கிந்திய தீவுகள்) மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த 2015ம் உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் மெல்போர்னில் மோதின. அதிலும் இலங்கை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2015ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.

அவற்றில் இரு அணிகளும் தலா 3 வெற்றி (ஒரு போட்டி மழையால் ரத்து) என்ற சமநிலையில் உள்ளதால், இன்றைய போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு 50-50 என்ற அளவில் உள்ளதாக முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

நடப்பு தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் பேட்ஸ்மென்கள் சவும்யா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகர் ரஹீம், மகமதுல்லா என அனைவருமே சிறப்பாக ஆடி ரன்களை குவித்துள்ளனர். அதே போல் இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மென்கள் பொறுப்பாக ஆடினால், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

ஏனெனில் வங்கதேச அணியுடன் ஒப்பிடுகையில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியின் பந்துவீச்சு வலுவாக காட்சியளிக்கிறது. இலங்கை பவுலர்கள் நூவான் பிரதீப், சுரங்கா லக்மல் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் பந்துவீச்சில் முத்திரை பதித்து வருகின்றனர்.

இன்று போட்டி நடைபெற உள்ள பிரிஸ்டலில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் டாஸ் வெல்லும் அணி, 2வதாக பேட் செய்யவே விரும்பும்.

.

மூலக்கதை