ஊழல் செய்யும் அமைச்சர்கள் பதவி நீக்கம்: ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஊழல் செய்யும் அமைச்சர்கள் பதவி நீக்கம்: ஆந்திர முதல்வர் எச்சரிக்கை

திருமலை: ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பேரணிநானே நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் தொடங்கி கிராமத்தில் உள்ள அதிகாரிகள் வரை யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பதே முதல்வரின் முக்கிய நோக்கம். ஊழல் இல்லாத மாநிலம் அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே இரண்டரை ஆண்டு பதவியில் இருக்கும் அமைச்சர்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அம்மா வழி திட்டத்தின் கீழ் எந்த ஒரு குழந்தையும் கூலி வேலைக்கு செல்லக்கூடாது.

அனைத்து பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஜனவரி 26ம் தேதி முதல் பள்ளி செல்லக்கூடிய குழந்தையின் தாயாருக்கு ₹15 ஆயிரம் வழங்கப்படும். அது அரசு பள்ளியில் படிக்க வைத்தாலும், தனியார் பள்ளியில் படிக்க வைத்தாலும் அந்த குழந்தையின் தாயாருக்கு ₹15 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

இது பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரேஷன் கடைகளில் தற்போது வழங்கக்கூடிய அரிசி தரமற்ற நிலையில் உள்ளது. எனவே, மக்கள் சாப்பிடக்கூடிய வகையில் இருக்கக் கூடிய அரிசியை அரசே கொள்முதல் செய்து அதனை 5 முதல் 15 கிலோ பாக்கெட்களாக கிராம தன்னார்வலர்கள் மூலமாக வீட்டிற்கே கொண்டு சென்று பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை ரேஷன் பொருட்களை கடையில் சென்றுதான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

இனி அவ்வாறு இல்லாமல் கிராம தன்னார்வலர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை