பட்ஜெட் ஆலோசனை இன்று துவங்குகிறது:அனைத்து தரப்பினரையும் சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

தினமலர்  தினமலர்
பட்ஜெட் ஆலோசனை இன்று துவங்குகிறது:அனைத்து தரப்பினரையும் சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி;பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசு, நடப்பு, 2019 -- 20ம் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை, 5ல், தாக்கல் செய்கிறது.
இதை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆலோசனை கூட்டங்களை இன்று முதல் நடத்த இருக்கிறார்.இந்தாண்டு பிப்ரவரியில், மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த, பியுஷ் கோயல், நடப்பு நிதியாண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டைதாக்கல் செய்தார்.இது, பார்லிமென்ட் ஒப்புதலுடன், புதிய அரசு அமையும் வரை, தேவையான நிதிச் செலவினங்களுக்காக தாக்கல்செய்யப்பட்டது.
தற்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள், இன்று முதல், 23ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
சவால்கள்
இதில், பொருளாதார நிபுணர்கள், வங்கிகள், நிதித் துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் தொழில் துறை பிரிவினர் ஆகியோரை சந்திக்கிறார்.மேலும், நிதியமைச்சர், பட்ஜெட் குறித்து, பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்டறிய உள்ளார்.இந்த பட்ஜெட்டில், நிதியமைச்சர் முன், நிறைய சவால்கள் உள்ளன.மந்தமான பொருளாதார நிலை, வாராக் கடன் உள்ளிட்ட வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான நிதி பிரச்னைகள், வேலைவாய்ப்பு, தனியார் முதலீடுகள், ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட, பல்வேறு சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பட்ஜெட் குறித்து, தொழில் துறை அமைப்பினரின் கருத்துகளை அறியும் பொருட்டு, ஏற்கனவே முதல் சுற்று பேச்சை நடத்தி முடித்துள்ளார், மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பேச்சின் போது, தொழில் துறையை சேர்ந்தவர்கள், பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்துள்ளனர்.தொழில் துறையினரின் கருத்துகளை அறிவது மட்டுமின்றி, சாதாரண மக்களின் கருத்துகளை, mygov.in இணையதளத்தின் மூலம் அறிவதற்கான ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது.
இதற்கிடையே, பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் இறங்கி உள்ள காரணத்தால், மத்திய நிதியமைச்சக அலுவலகங்கள், மீடியா உள்ளிட்டவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆலோசனை
வரும், 20ம் தேதியன்று, ஜி.எஸ்.டி., கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது மாநில நிதியமைச்சர்கள், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த தங்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.அனைத்து தரப்பு ஆலோசனைகளை பெற்ற பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் முதல் பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.

மூலக்கதை