சந்திப்பு! அமித்ஷாவுடன் முதல்வர் நாராயணசாமி... அரசின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
சந்திப்பு! அமித்ஷாவுடன் முதல்வர் நாராயணசாமி... அரசின் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியின் நிதி நெருக்கடியை சமாளிக்க, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், புதிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் நாராயணசாமி சந்தித்து, வலியுறுத்தினார்.

புதுச்சேரி மாநிலத்துக் கென, 17.12.2007ல் தனிக் கணக்கு தொடங்கப் பட்டு, ரூ.350 கோடி கடன் வாங்கப்பட்டது. ஆண்டு தோறும் கடன் வாங்கி செலவுகளை சமாளித்து வந்ததால், புதுச்சேரி அரசின் தற்போதைய கடன் சுமை ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு உள்ளது. ஆனால், வரி வருவாய் மூலம் மாதம் ரூ.200 கோடி, மத்திய அரசின் நிதியாக ரூ.125 கோடி என, 325 கோடி மட்டுமே அரசுக்கு கிடைக்கிறது.இவற்றில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ.200 கோடி ஊதியம், எஞ்சியுள்ள நிதியில், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டி, நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் பிற திட்டச் செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதனால், மாதந்தோறும் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில், நிதி நெருக்கடியில், அரசு சிக்கி தவித்து வருகிறது. நிதிச்சுமையால், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மாதந்தோறும் போராட வேண்டியுள்ளது.புதுச்சேரியில் நிதி நெருக்கடியை சமாளிக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக, முதல்வர் நாராயணசாமி டில்லி சென்று பலமுறை மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களை பலமுறை சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், மாநில அந்தஸ்து மற்றும் நிதி கேட்டு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டில்லி சென்று முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும், இதுவரையில் மத்திய பா.ஜ.,அரசு இறங்கி வரவில்லை. இதனால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு புதுச்சேரி காங்., அரசு வந்தது. ஆனால், மீண்டும் மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றது.

இந்நிலையில், மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர், 'மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்ற பிறகு,'அனைத்து மாநில வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்போம்' என நரேந்திரமோடி கூறியுள்ளார்.

எனவே, பிரதமரையும், அமைச்சர்களையும் சந்தித்து புதுச்சேரிக்கு தேவையான நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்' என, நாராயணசாமி கூறியிருந்தார்.அதன்படி நேற்று, டில்லி சென்ற நாராயண சாமி, புதிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மத்திய அரசின் 90 சதவீத மானிய திட்டங்களை தர வேண்டும், மத்திய, மாநில அரசு இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களை தர வேண்டும், புதுச்சேரியின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், புதுச்சேரியில் ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தி நிலுவை தொகையுடன் வழங்குவதற்கான தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை கள் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலுான்றும் நடவடிக்கையில் பா.ஜ., இறங்கியுள்ள நிலையில், புதுச்சேரி மாநில அரசின் கோரிக்கை நிறைவேற்ற கைகொடுக்கும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை