குடிசை மாற்று வாரியத்தில் வீடு கிடைக்குமா?பயனாளிகளுக்கு புதிய சிக்கல்

தினமலர்  தினமலர்
குடிசை மாற்று வாரியத்தில் வீடு கிடைக்குமா?பயனாளிகளுக்கு புதிய சிக்கல்

திருப்பூர்:குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டாலும், பயனாளிகள் அவற்றைப் பெறுவதில் சிக்கல் உள்ளது. கோவை மாநகராட்சி பின்பற்றிய நடைமுறையை கடைபிடிக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.குடிசை இல்லாத நகரை உருவாக்கும் முயற்சியாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி வீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அத்திட்டத்தில், தலா, 400 சதுர அடி கொண்ட வீடுகள் கட்டி, நீரோடை, ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை, பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர், வீரபாண்டி, நெருப்பெரிச்சல், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில், 6 ஆயிரத்து 40 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
அதற்காக, ஜம்மனை பள்ளம், சங்கிலிப்பள்ளம் ஓடை, நொய்யல் ஆறு, நல்லாற்றங்கரையில் உள்ள, ஆக்கிரமிப்பு வீடுகள் கணக்கிடப்பட்டன. இதன் மூலம் தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டனர்.வீடு ஒதுக்கீடு உத்தரவு வழங்கிய பிறகு, ஒரு மாதத்துக்குள், 80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவித்ததால், அதை பயனாளிகளால் செலுத்த இயலவில்லை. ஒதுக்கீடு செய்த வீட்டை பயன்படுத்தாமல், மீண்டும் ஆற்றங்கரையிலேயே, ஆபத்தான சூழலில் வசிக்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நீரோடைகள் அருகே, ஆபத்தான சூழலில் வசிக்கும் மக்களை, குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்றுவதில் சிக்கல் இருக்கிறது. பயனாளி பங்களிப்பு தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. கோவை மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலேயே, பயனாளிகள் பங்களிப்பு செலுத்தி, வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது, அரசின் நோக்கம். பொது நோக்கம் நிறைவேற, கோவை மாநகராட்சியில் பின்பற்றியது போல், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை கேட்டபோது, 'இக்கோரிக்கை தொடர்பாக, மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என, கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றனர்.

மூலக்கதை