உலக கோப்பை கிரிக்கெட் 2019: ஆஸியை வீழ்த்தியது இந்தியா...தவான், ரோஹித்தின் துவக்கம் பிரமாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை கிரிக்கெட் 2019: ஆஸியை வீழ்த்தியது இந்தியா...தவான், ரோஹித்தின் துவக்கம் பிரமாதம்

லண்டன்: ‘‘மிகச் சிறந்த வெற்றி இது. ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மாவின் துவக்கம் பிரமாதம்’’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்  கோஹ்லி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.   முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 352 ரன்களை குவித்தது. ஓபனர்களில் ஷிகர் தவான், ஆஸி.

பந்துவீச்சை அருமையாக  சமாளித்து சதம் (117 ரன்கள்) அடித்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் எடுத்தார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 22 ஓவர்களில் 127 ரன்களை குவித்து  நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து விராத் கோஹ்லி 82 ரன்கள், ஹர்திக் பாண்டியா 48 ரன்கள், டோனி 27 ரன்கள் என டாப் ஆர்டர்  மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அனைவரும் ஜொலித்தனர்.

 

353 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மென்களும் கடுமையாக போராடினர். 50 ஓவர்களில் 316 ரன்கள் என  வெற்றிக்கு அருகில் எட்டி விட்டனர்.

இந்திய அணியின் பவுலர்களும் விட்டுக் கொடுக்காமல் போராட, 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி  தோல்வியடைந்தது.

ஆஸி. பேட்ஸ்மென்கள் டேவிட் வார்னர் 56 ரன், கேப்டன் பின்ச் 36 ரன், ஸ்மித் 69 ரன், கவாஜா 42 ரன், மேக்ஸ்வெல் 28 ரன் எடுத்தனர்.

இந்தியா  தரப்பில் புவனேஸ்வர், பும்ரா தலா 3 விக்கெட், சாஹல் 2 விக்கெட் கைப்பற்றினர்.   இந்திய அணியின் கோஹ்லி கூறுகையில், ‘‘சமீபத்தில்தான் ஆஸ்திரேலியா, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. அந்த  தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது.

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் பிரமாதமான துவக்கத்தை கொடுத்தனர்.

 அடுத்து நான், ஹர்திக், டோனி நன்றாக ஆடினோம்.

புவனேஸ்வரின் பவுலிங் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் ஸ்மித் மற்றும் ஸ்டானீசை ஒரே  ஓவரில் வெளியேற்றினார்’’ என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா கேப்டன் பின்ச் கூறுகையில், ‘‘கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 120 ரன்களை குவித்துள்ளது. இந்தியாவின் பேட்டிங் மற்றும்  பவுலிங் நன்றாக இருந்தது.

எங்களது பவுலிங் எடுபடவில்லை’’ என்று தெரிவித்தார். ஆட்டநாயகான தேர்வான ஷிகர் தவான் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்த அணியின் முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.

இந்த வெற்றி இந்திய அணிக்கு  பெரிய அடையாளம். இந்திய அணி பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தியுள்ளது.

இதில் ஆட்டநாயகன் விருது எனக்கு கிடைத்துள்ளதில்  மகிழ்ச்சி’’ என்றார்.

இந்திய ரசிகர்களுக்கு கோஹ்லி ‘டோஸ்’

நேற்றைய போட்டியில் ஆஸி.

வீரர் ஸ்டீவ் ஸ்மித் பவுண்டரி அருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸி.   வீரர்கள் டேவிட் வார்னருக்கும், ஸ்டீவ் ஸ்மித்துக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

அந்த தடை முடிந்து 2 மாதங்களுக்கு முன்னர்தான் மீண்டும்  இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதை நினைவுபடுத்தும் வகையில் நேற்று ஸ்மித்தை நோக்கி இந்திய ரசிகர்கள் ‘ஏமாற்றுக்காரன்‘ என கத்தி  தொடர்ந்து கோஷமிட்டனர்.   அப்போது விராட் கோஹ்லி, ஆடிக் கொண்டிருந்தார்.

ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த  கோஹ்லி, அவர்களை கடிந்து கொண்டார்.

மேலும்  இந்திய ரசிகர்களின் சார்பில் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், ஸ்மித்திடம் அவர் தெரிவித்தார். கோஹ்லி கூறுகையில், ‘கடந்த காலம் என்பது கடந்து விட்டது.

இப்போது ஸ்மித் தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.   அவரைப் பார்த்து இவ்வாறு கோஷமிடுவது தவறு. அவரை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்திய ரசிகர்கள் தவறான முன்னுதாரணமாக இருக்கக்  கூடாது’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.   இந்திய ரசிகர்களை கடிந்த கோஹ்லியை, ஸ்மித் முதுகில் நெகிழ்ச்சியுடன் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

.

மூலக்கதை