பட்ஜெட்டில் விடை கிடைக்குமா?

தினமலர்  தினமலர்
பட்ஜெட்டில் விடை கிடைக்குமா?

மத்திய ரிசர்வ் வங்கி, மீண்டும், ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், சுணங்கிப் போன வங்கிக் கடன்கள் பெருகுமா; தொழில் வளர்ச்சி உயருமா; வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா; பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவரா?


இந்த ஆண்டு மட்டும், மூன்று முறை, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 6.50 சதவீதம் இருந்த ரெப்போ விகிதம், தற்போது, 5.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.



மத்திய ரிசர்வ் வங்கி, மற்ற வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதமே, ரெப்போ என்பது.அது குறைக்கப்படும் போது, வங்கிகளில் நிதிப் புழக்கம் அதிகரிக்கும். அவர்களுடைய, நிதி நிர்வாகச் செலவுகள் குறையும். பொதுமக்களுக்கும், தொழிலகங்களுக்கும் கூடுதல் கடன்களை வழங்க முடியும்.இது தான் எதிர்பார்ப்பு.



வழக்கம்போல், எல்லா எதிர்பார்ப்புகளும் நிறைவேறுவதில்லையே!இந்த முறை கூட, 0.25 சதவீதம் ரெப்போ குறைப்பு என்பது எதிர்பார்க்கப்பட்டதே. 0.50 சதவீதம் குறைக்கப்படலாம் என்று ஆரூடம் சொன்னவர்களும் உண்டு.இன்றைக்கு இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் சரிவைத் தடுத்து நிறுத்த, இத்தகைய அதிரடி நடவடிக்கை தேவை என்பது, ஒருசில, சந்தை நிபுணர்கள் கருத்து. ஆனால், இதை வேறொரு முனையில் இருந்து துவங்குவோம்.


பயன் யாருக்கு?


ரெப்போ விகிதம், 0.75 சதவீதம் குறைக்கப்பட்ட போதும், பொதுமக்களுக்கு இதனால் கிடைத்த நேரடி பலன் என்ன? ரிசர்வ் வங்கியே சொல்வது போல், 0.21 சதவீத வட்டி குறைப்பையே வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கின. அதாவது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என்கிறார்.இன்னொரு இடத்திலும் இதே போன்ற நிலைமையைப் பார்க்கலாம். சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை குறையுமானால், அதன் பலன், இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது.



எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், புத்திசாலிகள். விலை உயரும்போது தான், அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படுகிறது. குறையும்போது, அதற்கு இணையான விலை குறைப்பு நடைபெறுவதில்லை.நடுவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், கச்சா எண்ணெய் விலை சரிவின் பயனைத் துய்ப்பதாக விமர்சனம் செய்யப்படுகின்றன.



இதே நிலைமை தான், வங்கித் துறையிலும். ரெப்போ விகித சரிவின் பலனை, வங்கிகள் மட்டுமே துய்க்கின்றன. அதன் சுவையை துளியளவுக்குக் கூட, வாடிக்கையாளர்களுக்குத் தர மறுக்கின்றன என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. உண்மை தான்.சுவை என்பதை விட, இங்கே சுமையே அதிகம். அடிப்படையில், வங்கித் துறையில் உள்ள, பிரச்னைகளையும் பார்க்க வேண்டும். சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது.


இல்லையென்றால், பொதுமக்களோ, பெரிய நிறுவனங்களோ, வங்கிகளில் சேமிப்புகளை வைத்திருக்க மாட்டார்கள்.அதாவது, ‘காஸ்ட் ஆப் பண்டு’ என்று சொல்லப்படும், நிதியைத் திரட்டுவதற்கான செலவினம், கூடுதல். அதை, ஒருபுறம் சமாளிக்க வேண்டும்.மறுபுறம், வங்கியல்லா நிதி நிறுவனங்களின் தள்ளாட்டம். சமீபத்தில் கூட, மற்றொரு பெரிய வங்கியல்லா நிதி நிறுவனம் ஆட்டம் கண்டிருக்கிறது. இவர்களும், வங்கிகளில் கடன் வாங்கித் தான், கூடுதல் வட்டிக்கு, வெளியே வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் தொழிலில் தள்ளாட்டம் ஏற்பட்டால், அது வங்கிகளுக்குத் திண்டாட்டம் தான்.


மூன்றாவது, பல வங்கிகளின் கணக்குப் புத்தகங்களில், மத யானையாக உட்கார்ந்து கொண்டிருக்கும் வாராக் கடன்கள். கடன்கள் கொடுக்கப் போதிய நிதி இல்லை; வர வேண்டியவையும் வரவில்லை. பணியாளர்களுக்குச் சம்பளமும் கொடுத்து, வங்கிகளை நிர்வாகமும் செய்ய வேண்டும். வங்கித் தலைமைகள் என்ன செய்யும்?



இதுபோல், ‘ரெப்போ விகிதம்’ குறைக்கும்போது, அவற்றின் பலனை கபளீகரம் செய்து கொள்ளவே முயற்சிக்கும். தங்களுக்குப் போகத்தானே தானமும் தர்மமும்?ஆர்.பி.ஐ., அள்ளிக் கொடுத்தால், வங்கிகள் கிள்ளிக் கொடுக்கின்றன. இதை நேர் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.என்ன செய்ய வேண்டும்?



ஒன்று, வங்கிகளின் வாராக் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்து, தலை முழுகிட வேண்டும் அல்லது, அவற்றை ஒரு தனி அமைப்பிடம் வழங்க வேண்டும். ‘வாராக் கடன் வங்கி’ என்று அழைக்கப்படும், ‘பேட் பேங்க்’கை உருவாக்கி, வசூல் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும். இதன் மூலம், வங்கிகள் கொஞ்சம் மூச்சு விடும்.இதைத் தொடர்ந்து வங்கிகளுக்கு போதுமான மறுமுதலீடு வழங்கி, புதிய கடன்களை வழங்குவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.



வாராக் கடன் என்ற பெருஞ்சுமையைத் துாக்கிக் கொண்டு, வங்கிகளால் ஓட முடியவில்லை. அதை விட முக்கியமாக, வங்கியாளர்கள் மனதுக்குள் குற்றவுணர்ச்சி இருக்கிறது. தாங்கள் ஏதேனும் ஒரு வகையில் சிக்க வைக்கப்பட்டு விடுவோமா என்ற அச்சமும் இருக்கிறது.இதன் விளைவு தான், வங்கித் துறையில் கடன் சுணக்கம்.உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். அது தனிக் கதை; தனி விசாரணை. ஆனால், அதற்காக, மொத்த வங்கித் துறையும் தேங்கிப் போய்விடக் கூடாது; உயிர்ப்போடு இயங்க வேண்டும்.



ரெப்போ விகிதத்தைக் குறைத்தால் மட்டும் போதாது. அது, மக்களை நேரடியாகச் சென்று தடையாக உள்ள முள்ளையும், புதர்களையும் களைந்து, பாதையையும் செம்மை செய்ய வேண்டும்.ஜூலை, 5ம் தேதி நிர்மலா சீதாராமன் வழங்கப்போகும் பட்ஜெட்டில், இதற்கான விடை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.



ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

மூலக்கதை