கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கீழடியில் 5- ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். 

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் வீரகற்கள், நடுகற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை பாதுகாக்க இந்த ஆண்டு ஒரு திட்டத்தை தீட்டியுள்ளோம்.  

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும் தான் 2 நாட்களுக்கு ஒரு புதையல் வீதம் கிடைத்து வருகிறது. அப்படிக் கிடைத்த புராதனச் சின்னங்களை, தமிழ்  வளர்ச்சித் துறை மூலம் 91 இடங்களில் பாதுகாத்து வருகிறோம். இன்னும் 12 புராதன சின்னங்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

தமிழகத்தில் செஞ்சிக்கோட்டை உட்பட 12 கோட்டைகளை மேம்படுத்த ரூ. 24 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட  உள்ளது. 

கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் துவங்கப்பட உள்ளது. தமிழக அரசு கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய 3 பகுதிகளிலும் அகழ்  வைப்பகங்களை விரைவில் உருவாக்க உள்ளது. 

அரியலூரில் ஒரு அருங்காட்சி யகத்தை முதல்வர் துவக்க உள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு  அருங்காட்சியகம் என முடிவெடுத்து இருக்கிறோம். இந்த ஆண்டு 2 புதிய அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட உள்ளது. 

நெடுமணல், கீழடி, திருவள்ளூர்  மாவட்டத்தில் உள்ள பட்டரைப் பெரும்புதூர் ஆகிய 3 இடங்களிலும், அகழ்வாராய்ச்சிகள் நடைபெற உள்ளது.  

மத்திய அரசின் நிதியைப் பெற்று,  தமிழகத்தில் இருக்கும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் பணிகளை வேகமாக செய்வோம். 

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

மூலக்கதை