ஒட்டுமொத்த முயற்சியே வெற்றிக்கு காரணம்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒட்டுமொத்த முயற்சியே வெற்றிக்கு காரணம்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் உற்சாகம்

நாட்டிங்காம்: ‘ஒட்டுமொத்த முயற்சியே வெற்றிக்கு காரணம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் உற்சாகத்துடன் தெரிவித்தார். ஐசிசி உலக கிரிக்கெட் தொடரில், நாட்டிங்காமில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. ஓபனர்கள் இமாம் உல் ஹக் 44 ரன், பகார் ஸமான் 36 ரன் எடுத்தனர்.

பாபர் ஆஸம் 63 ரன், முகமது ஹபீஸ் 84 ரன், கேப்டன் சர்பராஸ் அகமது 55 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

349 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன் மட்டுமே எடுத்தது.

இதனால் 14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தது. ஜோ ரூட் 107 ரன், பட்லர் 103 ரன் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ரியாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். பாகிஸ்தானின் ஹபீஸ் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்த முயற்சியே அணியின் வெற்றிக்கு காரணம். சிறப்பாக ஆடிய பேட்ஸ்மென்களுக்கு நன்றி.

பவுலர்கள் அருமையாக பந்து வீசினர். ஓபனர்கள் இமாம், பகார் சிறப்பாக ஆடினர்.

சதாப்பின் சுழற்பந்து வீச்சுக்கு முன்பு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங் எடுபடவில்லை.

பீல்டிங்கும் அருமையாக இருந்தது.

அடுத்து வரும் போட்டிகளிலும் நன்றாக ஆடுவோம் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ள எங்கள் அணி, இந்த வெற்றியின் மூலம் மீண்டு வந்துள்ளது’’ என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘‘டிரென்ட்பிரிட்ஜ் பேட்ஸ்மென்களுக்கு ஏற்ற மைதானம். ஜோ ரூட், ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடினர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் தோல்வியடைந்தோம்.

பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக ஆடினர்’’ என்றார்.

.

மூலக்கதை