பிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓபனில் சாதனை: தொடர்ந்து 10வது முறையாக காலிறுதியில் ஜோகோவிச்

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு தொடர்ந்து 10வது முறையாக தகுதி பெற்று ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். ஆடவர் ஒற்றையர் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், நேற்று பிரெஞ்ச் ஓபன் 4வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜான் லென்னார்ட் ஸ்டரஃபுடன் மோதினார்.

இதில் 6-3, 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று, ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையரில் தொடர்ந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை ஜோகோவிச் எட்டியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய சர்வீஸ்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் ஜோகோவிச் மோதவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னியை 3-6, 6-2, 6-2, 7-6 என 4 செட்களில் போராடி வீழ்த்தி போபியோ காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஸ்வெரவும், ஜோகோவிச்சும் இதுவரை 4 போட்டிகளில் மோதியுள்ளனர்.

அதில் இருவரும் தலா 2 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளனர்.

ஸ்விட்சர்லாந்தின் முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா மற்றும் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ஜப்பான் வீரர் நிஷிகோரி, ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், ரஷ்ய வீரர் கேரன் காச்சனோவ் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை