ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்: வலுவான மேற்கிந்திய தீவுகளை சமாளிக்குமா பாகிஸ்தான்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி உலககோப்பை கிரிக்கெட்: வலுவான மேற்கிந்திய தீவுகளை சமாளிக்குமா பாகிஸ்தான்?

நாட்டிங்ஹாம்: ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று நாட்டிங்ஹாமின் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இப்போட்டி மதியம் 3 மணிக்கு துவங்குகிறது.

கடந்த ஓராண்டாகவே மேற்கிந்திய தீவுகள் அணி, ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அணி கடைசியாக ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

வெற்றிகளை தக்க வைக்கும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகளும், தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் துடிப்பில் பாகிஸ்தான் அணியும் இன்று டிரென்ட்பிரிட்ஜில் களமிறங்குகின்றன. சர்பராஸ் அகமது தலைமையிலான பாக்.

அணியில் இளம் வீரர்கள் இமாம் உல் ஹக், பகர் ஜமன், பாபர் அசம் மற்றும் அனுபவ வீரர் சோயப் மாலிக் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். ஹாரிஸ் சோஹைல் மற்றும் மொகமத் ஹபீஸ் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக இடம் பெற்றுள்ளனர்.

பாக். அணியை பொறுத்தவரை இம்ரான் கான், வாசீம் அக்ரம், அகிப் ஜாவேத், வக்கார் யூனுஸ் ஆகியோருடன் பந்துவீச்சின் ஆதிக்கம் முடிந்து விட்டது என்றே கூற வேண்டும்.

இவர்களுக்கு நிகரான வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் தற்போதைய அணியில் இல்லை என்பது பெரும் பலவீனம். தவிர சொல்லிக் கொள்ளும்படியாக முதல் தர ஸ்பின் பவுலர்களும் பாக்.

அணியில் இல்லை. வேகப்பந்து வீச்சில் இதுவரை முத்திரை பதிக்காத வகாப் ரியாஸ், ஹசன் அலி, மொகமது அமிர், ஷஹீன் அப்ரிதி ஆகியோரே தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது.

அனுபவ வீரர்கள் பிராவோ, கிறிஸ் கெய்லுடன் இளம் வீரர்கள் ஹெட்மேர், எவின் லூயிஸ் ஆகியோரும் டாப் ஆர்டரில் இறங்குவார்கள். தொடர்ந்து அதிரடியாக ஐபிஎல்லில் பேட்டை சுழற்றி எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன்ரேட்டை எகிற விட்ட ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் மிரட்டக் காத்திருக்கிறார்.

கேப்டன் ஜேசன் ஹோல்டர், பிராத்வெயிட் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் இக்கட்டான வேளைகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவி வருகிறார்.

பவுலர்களில் கீமர் ரோச், ஆஷ்லே நர்ஸ் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர். டிரென்ட்பிரிட்ஜில் முதலில் பேட் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு சதவீதம் அதிகம் என்பதால் இப்போட்டியிலும் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய போட்டியில் ஆடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய அணி விபரம் வருமாறு: மேற்கிந்திய தீவுகள்: கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ஹெட்மேர், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஆஷ்லே நர்ஸ், கீமர் ரோச், ஷெல்டன் காட்ரல் மற்றும் ஒஷானே தாமஸ்.

பாகிஸ்தான்: இமாம் உல் ஹக், பகர் ஜமன், பாபர் அசம், ஹாரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமத் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொகமத் ஹபீஸ், ஆசிப் அலி, ஷதப் கான், ஹசன் அலி மற்றும் வகாப் ரியாஸ்.

.

மூலக்கதை