இங்கிலாந்து- தென்னாப்பிரிக்கா இன்று மோதல் நடப்பு உலகக்கோப்பையில் முதல் வெற்றி யாருக்கு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா இன்று மோதல் நடப்பு உலகக்கோப்பையில் முதல் வெற்றி யாருக்கு?

லண்டன்: இங்கிலாந்தில் இன்று துவங்கும் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை.   இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஜோப்ரா, ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் பென்ஸ் ஸ்டோக்ஸ், லயம் பிளங்க்கெட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் என மிரட்டும் பவுலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாவே இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ‘ஃபார்மில்’ உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.   தவிர இம்முறை உலகக்கோப்பை சொந்த மண்ணில் நடைபெற உள்ளதால் உள்ளூர் ரசிகர்களை ஏகோபித்த ஆதரவோடு, இங்கிலாந்து வீரர்கள் கலக்க உள்ளனர்.



நிறவெறி கொள்கையால் தென்னாப்பிரிக்கா விளையாட்டு உலகில் பல ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. தடை நீங்கிய பின்னர் முதன் முதலாக 1992ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அந்த அணி இடம் பெற்று ஆடியது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்த 1991ம் ஆண்டு முதல் சிறப்பாக ஆடி வருவதால் தென்னாப்பிரிக்கா அணி, வலிமை வாய்ந்த கிரிக்கெட் அணிகளின் பட்டியலில் இன்று வரை நீடிக்கிறது. மேலும், இங்கிலாந்து மைதானங்களை தென்னாப்பிரிக்கா அணிக்கு 2வது தாய் வீடு என்றும் சொல்லலாம்.   கேப்டன் டூ பிளெஸ்சி தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியில் குவின்டான் டி காக், டேவிட் மில்லர், டூமினி, ஆம்லா என திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டுகின்றனர்.

ராபடா, இம்ரான் தாஹிர், கிரிஸ் மோரிஸ் என பவுலர்களும் மிரட்டுகின்றனர். ஓவலில் முதலில் பேட் செய்யும் அணிக்கு 68 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளது.

எனவே இன்றயை போட்டியில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரு அணிகளிலும் இடம் பெற உள்ள 11 வீரர்களின் பட்டியல் வருமாறு:  இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மார்கன்(கேப்டன்), பென் ஜோஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மோயின் அலி, கிரீஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லயம் பிளங்கெட், அடில் ரஷித். தென்னாப்பிரிக்கா: ஹசீம் ஆம்லா, குவின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ராம், பால் டூ பிளெஸ்சி (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், கிரிஸ் மோரிஸ், பெஹலுக்வாயோ, ரபாடா, நிஜிடி, இம்ரான் தாஹிர்.

.

மூலக்கதை