பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஒசாகா, ஹாலேப் போராடி வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஒசாகா, ஹாலேப் போராடி வெற்றி

பாரீஸ்:  பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகளில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா, சிமோனா ஹாலேப் கடும் போராட்டத்துக்கு பின்னர் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா, ஸ்லோவோக்கியாவை சேர்ந்த அன்னா கரோலினாவை எதிர் கொண்டார்.

மகளிர் ஒற்றையர் தர வரிசையில் தற்போது முதல் இடத்தில் உள்ள ஒசாகா, இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் தோல்வியின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பினார்.

முதல் செட்டை 6-0 என அதிரடியாக கைப்பற்றி, ஒசாகாவுக்கு அதிர்ச்சியளித்த அன்னா கரோலினா, அடுத்த செட்டிலும் புயலென புகுந்து விளையாடினார்.

அந்த செட்டில் கரோலினாவின் ஒரு கேமை கூட ஒசாகாவால் பிரேக் செய்ய முடியவில்லை. இதனால் அந்த செட் டை பிரேக்கர் வரை நீடித்தது.

டை பிரேக்கரிலும் முதலில் கரோலினாவின் கையே ஓங்கியிருந்தது. அதில் மேட்ச் பாயின்ட் வரை முன்னேறி, ஒசாகாவை பதற வைத்தார் கரோலினா.

ஒரு வழியாக மேட்ச் பாயின்ட்டை முறியடித்த ஒசாகா, டை பிரேக்கரை 7-6 என கைப்பற்றினார். அதன் பின்னர் 3வது செட்டில் சீறியெழுந்த ஒசாகா, அந்த செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இதன் மூலம் 0-6, 7-6, 6-1 என 3 செட்களில் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு ஒசாகா முன்னேறினார்.

பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியனும், மகளிர் ஒற்றையர் தர வரிசையில் தற்போது 3ம் இடத்தில் உள்ளவருமான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப், நேற்றைய முதல் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டாம்ஜானோவிக்குடன் மோதினார். இதில் முதல் செட்டை ஹாலேப் 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

ஆனால் 2வது செட்டில் திடீரென வீறு கொண்டு எழுந்த அஜ்லா, அந்த செட்டை 6-3 என கைப்பற்றி அதிர்ச்சியளித்தார்.

இரண்டாவது செட்டில் அவரது சர்வீஸ்களையும், ரிட்டர்ன் ஷாட்டுகளையும் நன்கு கணித்து விட்ட ஹாலேப், 3வது செட்டில் தனது ஆட்ட வியூகத்தை முற்றிலும் மாற்றினார். பேஸ் லைனில் இருந்து நெட்டுக்கு அதிரடியாக முன்னேறிய அவர், தாக்குதல் பாணியை கையில் எடுத்து, ஆஸி.

வீராங்கனையை திணறடித்தார். அந்த செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இதன் மூலம் முதல் சுற்றில் 6-2, 3-6, 6-1 என 3 செட்களில் வெற்றி பெற்று, ஹாலேப் 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

.

மூலக்கதை