பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் 2ம் சுற்றில் ஜோகோவிச், நடால், டொமினிக் தீம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் 2ம் சுற்றில் ஜோகோவிச், நடால், டொமினிக் தீம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டிகளில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நடால் மற்றும் டொமினிக் தீம் ஆகியோர் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஏடிபி தர வரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் போலந்தை சேர்ந்த 22 வயதேயான இளம் வீரர் ஹியூபர்ட் ஹர்காசுடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-4, 6-2, 6-2 என நேர் செட்களில் ஜோகோவிச் வெற்றி பெற்று, 2ம் சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் முன்னணி வீரர் டொமினிக் தீம், நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் டாமி பாலை எதிர்கொண்டார்.



இதில் முதல் செட்டை 6-4 என டொமினிக் தீம் கைப்பற்ற, பதிலுக்கு 2வது செட்டை 6-4 என டாமி பால் கைப்பற்றி அசத்தினார். 3வது செட்டிலும் டாமி பால் கடுமையாக போராடினார்.

அந்த செட்டில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் ஆடினர். இதனால் டைபிரேக்கர் வரை அந்த செட் நீடித்தது.

டைபிரேக்கரில் 7-6 என்ற கணக்கில் அந்த செட்டை தீம் வசப்படுத்தினார். பின்னர் 4வது செட்டை எளிதாக தீம் கைப்பற்ற, 6-4, 4-6, 7-6, 6-2 என 4 செட்களில் அந்த மேட்ச் முடிவுக்கு வந்தது.

வெற்றிக்கு பின்னர் தீம் கூறுகையில், ‘‘கொஞ்சம் அசந்திருந்தால், முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். டாமி சிறப்பாக போராடினார்.

அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்று கூறினார்.

12வது முறையாக பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைக்க வேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், நேற்று நடந்த முதல் சுற்றில் ஜெர்மன் வீரர் யானிக் ஹான்ப்மனுடன் மோதினார்.

ஒரு மணி நேரத்தில் முடிந்த இப்போட்டியில் நடால் 6-2, 6-1, 6-3 என நேர் செட்களில் எளிதாக வென்று, 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

.

மூலக்கதை