பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெற்றி

சவுத்தாம்ப்டன்: ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன. இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ளன. இதில் பங்கேற்க உள்ள அணிகள் தற்போது இங்கிலாந்து மைதானங்களில் பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றன.

நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.

ஓபனர் திர்மானே அதிகபட்சமாக 56 ரன்கள்(7 பவுண்டரி) எடுத்தார். குஷால் மெண்டிஸ் 24 ரன்கள், ஜே. மெண்டிஸ் 21 ரன்கள், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்கள், பெராரா 27 ரன்கள் எடுத்தனர்.



ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 39 ரன்களை வழங்கி 2 விக்கெட் வீழ்த்தினார். 240 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி, 44. 5 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓபனர் கவாஜா 89 ரன்கள்(3 பவுண்டரி) விளாசினார். ஷான் மார்ஷ் 34 ரன்கள், மேக்ஸ்வெல் 36 ரன்கள், ஸ்டாய்னிஸ் 32 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை பவுலர் வாண்டர்ஷே 51 ரன்களை கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து வெற்றி லண்டன்: லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 38. 4 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே ஆல் அவுட் ஆனது.



ஓபனர் ரஹ்மத் ஷா 30 ரன்கள்(5 பவுண்டரி), முகமது நபி 44 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ரூட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி, 17. 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஓபனர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 89 ரன்களை(11 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்தார். ஜானி பேர்ஸ்டோ 39 ரன்கள், ரூட் 29 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 34 ரன் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

.

மூலக்கதை