மாரத்தான் ஓட்டம்: 12.5 கிமீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்து திண்டுக்கல் முதியவர் சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாரத்தான் ஓட்டம்: 12.5 கிமீ தூரத்தை 54 நிமிடத்தில் கடந்து திண்டுக்கல் முதியவர் சாதனை

தேனி: தேனியில் நடந்த மாரத்தானில் 12. 5 கி. மீ. தூரத்தை 56 வயது நிரம்பிய கர்னல் 54 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.

தேனியில் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நேற்று காலை விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் பங்கேற்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல்லை சேர்ந்த கர்னல் வீரமணி (56) அழைக்கப்பட்டிருந்தார்.

352 பேர் ஓடிய மாரத்தானில் இவரும் இளைஞர் போல் துள்ளி குதித்து ஓட தொடங்கினார். சில இடங்களில் ஓட முடியாமல் களைத்து நடந்த இளைஞர்களை இவர்  ஓடுமாறு ஊக்கப்படுத்தினார்.

ஓட்ட தூரமான 12. 5 கிலோ மீட்டரை இவர் கடக்க 54 நிமிடமானது.

வீரர்களை உற்சாகப்படுத்தாமல் ஒரே கவனத்தில் வீரமணி ஓடியிருந்தால் 40 நிமிடத்தில் கடந்து முதலிடம் பெற்றிருப்பார் என ராணுவத்தினர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கர்னல் வீரமணி கூறுகையில், ‘‘நான் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியில் சேர்ந்தேன். 32 ஆண்டு சர்வீஸ் செய்து கர்னல் ஆக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றேன்.

எனது பணிக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்துள்ளேன்.
கார்கில் போரிலும் பங்கேற்றேன்.

மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனையை முதலில் நீ கடைபிடித்து வாழ் என்பது தான் வாழ்வின் அடிப்படை தத்துவம்.

இதனால் தான் இளைஞர்களுடன் ஓடி சென்று அவர்களை ஊக்கப்படுத்தினேன்’’ என்றார்.

.

மூலக்கதை