தேசிய ஜூனியர் பேட்மின்டன்: மெய்ராபா சாம்பியன்

தினகரன்  தினகரன்
தேசிய ஜூனியர் பேட்மின்டன்: மெய்ராபா சாம்பியன்

சென்னை: தேசிய ஜூனியர் பேட்மின்டன் ஆண்கள் யு-19 ஒற்றையர் பிரிவில், மணிப்பூர் வீரர் மைஸ்நம் மெய்ராபா சாம்பியன் பட்டம் வென்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த தொடரில் நாடு முழுவதும் இருந்து 800 ஆண்கள் 400 பெண்கள் என மொத்தம் 1200 பேர் கலந்து கொண்டு  விளையாடினர். இப்போட்டிகளை  இந்திய பேட்மின்டன் அசோசியேஷன் ஆதரவுடன் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் நடத்தியது.  இறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.  ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில்   மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மைஸ்நம் மெய்ராபா   21- 9, 12 -7 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி வீரர் ஆகாஷ் யாதவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். முன்னதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில்  மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த டிங்கு சிங் கோந்தூஜம் -  ரித்திகா தாக்கர் (மஹாராஷ்ரா) ஜோடி 21-18, 21-12 என்ற புள்ளி கணக்கில் இஷான் பட்நாகர் (சண்டிகர்) - டனிஷா கிரஸ்ரோ (கோவா) ஜோடியை வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவில்  அதிதி பாட் - டனிஷா கிருஷ்டோ  ஜோடி 21-14, 21-16 என்ற புள்ளிக் கணக்கில்  சிம்ரன் சிங்கி - ரித்திகா தாக்கர் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில்   இஷான் பட்நாகர் - விஷ்னுவர்தன் கவுட் ஜோடி 21-18, 21-13 என்ற நேர் செட்களில் மன்ஜித் சிங் கவுராக்பம் - திக்குசிங் குன்தோஜம் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தெலங்கானா வீராங்கனை  சமியா இமாட் பரோக்கி 21-17, 21-12 என்ற நேர் செட்களில் டெல்லியை  சேர்ந்த ஆஷ்யி ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.  வெற்றி பெற்றவர்களுக்கு இந்த தொடரின் ஸ்பான்சரான  வினோத் குமார் மற்றும் இந்திய பேட்மின்டன் அணியின்  பயிற்சியாளர் மாறன், பேட்மின்டன் சங்க செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

மூலக்கதை